தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளியை கரடி தாக்கியது ஆஸ்பத்திரியில் அனுமதி


தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளியை கரடி தாக்கியது ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 11 Aug 2018 10:45 PM GMT (Updated: 11 Aug 2018 4:39 PM GMT)

குலசேகரம் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளியை கரடி தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் மலையோர  பகுதியில் உள்ள தோட்டங்களில் அடிக்கடி யானை, கரடி, புலி போன்ற காட்டு விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த விலங்குகள் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்ற வண்ணம் உள்ளன. இவ்வாறு காட்டு விலங்குகள் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று குலசேகரம் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளியை கரடி தாக்கியது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

குலசேகரம் அருகே உள்ள மாத்தூரை சேர்ந்தவர் ஜெபமணி (வயது 58), கூலி தொழிலாளி. இவர் நேற்று பெருஞ்சாணி அணை பகுதியில் உள்ள ஒரு அன்னாசிபழம் தோட்டத்தில் களை வெட்டும் வேலைக்காக சென்றார். அங்கு அவர் வேலை செய்து கொண்டிருந்த போது, தோட்டத்தில் ஒரு கரடி புகுந்தது. அது நைசாக நடந்து வந்து, வேலை செய்து கொண்டிருந்த ஜெபமணி மீது பாய்ந்தது.

இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத ஜெபமணி சுதாரிப்பதற்குள் கரடி அவரை தாறுமாறாக கடித்து குதறியது. அவர், ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என்று சத்தம் போட்ட நிலையில் கரடியுடன் போராடினார்.

இவரது சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர்கள் தோட்டத்துக்கு ஓடி வந்தனர். அவர்கள், ஜெபமணியை கரடி கடித்து கொண்டிருப்பதை கண்டு  அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே, விரைவாக செயல்பட்டு கம்புகளால் கரடியை அடித்து விரட்டினர். பொதுமக்கள் தாக்கியதும் கரடி அங்கிருந்து  தப்பி ஓடியது. பின்னர் ஜெபமணியை மீட்டனர்.

ஜெபமணிக்கு முகம், கால், கை என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருந்தது. படுகாயம் அடைந்த அவரை குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வேளிமலை வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வன அலுவலர் சில்வெஸ்டர் மற்றும் வனகாப்பாளர்கள் தோட்டத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் அங்கு பதிவாகியிருந்த கரடியின் கால் தடங்களை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story