அரியவகை படங்கள், வரலாற்று பதிவுகள் அடங்கிய அருங்காட்சியக ரதத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்
மாவட்டத்தில் சுற்றுப்பயணம் வந்த அரியவகை படங்கள் மற்றும் வரலாற்று பதிவுகளுடன் கூடிய அருங்காட்சியக ரதத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்.
சிவகங்கை,
சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியக துறையின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அருங்காட்சியக காட்சி ரதம் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த ரதம் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய வருகை தந்துள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகை தந்த அந்த ரதத்தை கலெக்டர் லதா வரவேற்று, அதனை பார்வையிட்டார். பின்னர் அரசுத்துறை அதிகாரிகளும் ரதத்தை பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர் லதா கூறியதாவது:–
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் அருங்காட்சியக காட்சி ரதத்தின் மூலம் கண்காட்சி நடத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்திற்கு இந்த ரதம் வருகை தந்துள்ளது. இந்த ரதம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று எல்லோரும் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியக ரதம் செல்லும்.
இந்த ரதத்தில் தென்னிந்திய நாணயம், சோழர் கால நாணயம், பாரம்பரிய இசைக்கருவிகள், போர் கருவிகள், அரியவகை அஞ்சல் வில்லைகள், சிற்பங்கள், செப்பேடுகள், அறியவகை பாலூட்டி வகைகள், மண்பாண்டங்கள், கனிமங்கள், தாவரவியல், அரியவகை ஓவியங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனத்தின் உள்பகுதியில் மின்னணு திரையில் பாரம்பரிய வரலாற்று சிறப்பு குறித்த குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சிவகங்கை வட்டார பள்ளிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் அருங்காட்சியக ரதத்தை பார்வையிட்டனர்.