சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி கம்பு, சோளம் விதைத்து நூதன போராட்டம்


சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி கம்பு, சோளம் விதைத்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2018 4:15 AM IST (Updated: 12 Aug 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி கம்பு, சோளம் விதைத்து நூதன போராட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.109 கோடியே 62 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிக்கு கழிவுநீர் குழாய் பதிக்க சாலையில் குழி தோண்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போது பெய்து வரும் மழைக்கு சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விட்டன.

இந்த நிலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி கம்பு, சோளம் விதைக்கும் போராட்டம் காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட ராகுல்காந்தி பேரவை சார்பில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம் தலைமை தாங்கினார். ஊத்துக்காடு ரோட்டில் பொதுமக்கள் இணைந்து சேற்றில் நாற்று நட்டனர். இதில் நகர தலைவர் நவீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து ராகுல்காந்தி பேரவையினர் கூறியதாவது:–

நகராட்சி பகுதிகளில் சாலைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளன. இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதோடு, வாகன ஓட்டிகளுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. சாலைகளை சீரமைக்க கோரி சப்–கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் 365 வீதிகளில் தானியங்கள் விதைக்கும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இதற்காக கம்பு, சோளம் தலா 5 கிலோ வீதம் வாங்கி சாலைகளில் உள்ள சேற்றில் விதைக்கப்பட்டு உள்ளது. இதன் பிறகும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story