மாவட்ட செய்திகள்

கூடலூரில் தொடரும் மழையால் பல இடங்களில் மண் சரிவு, பொதுமக்கள் பீதி + "||" + Soil deterioration in many places due to rain in guddalore

கூடலூரில் தொடரும் மழையால் பல இடங்களில் மண் சரிவு, பொதுமக்கள் பீதி

கூடலூரில் தொடரும் மழையால் பல இடங்களில் மண் சரிவு, பொதுமக்கள் பீதி
கூடலூரில் பெய்து வரும் தொடர் மழையால், பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கூடலூர்,

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளா– கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகாவிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் கடுங்குளிர் நிலவுவதோடு, பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ள. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் புஷ்பகிரி என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் விரிசல் விழுந்தது. ஆனால் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. தற்போது தொடர்ந்து மழை பெய்வதால், விரிசல் அதிகமாகி வருகிறது. இதேபோல் கூடலூரில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் நீர்மட்டம் பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கூடலூர் கெவிப்பாரா ராக்லேண்ட் பகுதியில் ஜெயா என்பவரது வீட்டின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வீடு சேதம் அடைந்ததுடன், மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு மின்கம்பமும் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து வருவாய் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வருவாய் துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கூடலூர் அருகே தட்டக்கொல்லி பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டது.

ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆத்தூர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது வீட்டின் பின்பக்க சுவர் இடிந்தது. தகவல் அறிந்த வருவாய் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். எழுத்துபூர்வமாக மனு வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர். இதனிடையே கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குறுமிளகு விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேரம்பாடி அருகே மண்ணாத்திவயலில் இருந்து சோலாடி கூட்டுக்குடிநீர் திட்ட கிடங்கிற்கும், அரசு உயர்நிலைப்பள்ளிக்கும் செல்லும் சாலையோரத்திலும், சேரம்பாடியில் இருந்து பந்தலூர் செல்லும் வழியில் பாலவாடிவளைவு பகுதியில் சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.


அதிகம் வாசிக்கப்பட்டவை