காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானியில் 250 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பவானியில் 250 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 12 Aug 2018 5:15 AM IST (Updated: 12 Aug 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பவானியில் 250 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பவானி,

தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது.

இதனால் மேட்டூர் அணை நிரம்பியதுடன், அதில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றின் 2 கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதன்காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ள பல படித்துறைகள் முழுவதும் நேற்று மாலை 6 மணி அளவில் மூழ்க தொடங்கின.

பின்னர் தண்ணீர் படிப்படியாக உயர்ந்து படித்துறையை தாண்டி அந்த பகுதியை ஒட்டி உள்ள காவிரி வீதி, மார்க்கெட் வீதி, தேர் வீதி பழையபாலம் ஆகிய இடங்களில் 250–க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாலையில் திடீரென வீட்டுக்குள் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் புகுந்ததால் பலர் செய்வதறியாது தவித்தனர். இதனால் அவர்கள் தங்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

பவானி காவிரி ஆற்றங்கரையோரம் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த தகவல் கிடைத்தும் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், பவானி தாசில்தார் சிவகாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கதிர்வேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் மணிமேலை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையோர பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அந்தந்த பகுதியில் 6 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் படித்துறை பகுதிகளை மூழ்கடித்து ஆற்றில் வெள்ளம் சென்றதால் அந்த பகுதியில் யாரும் சென்றுவிடாதபடி கயிறு மூலம் தடுப்பு அமைத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பவானியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் காவிரி ஆற்றுக்கு சென்று ஆற்றை வேடிக்கை பார்த்தனர்.

வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் மாவட்ட கலெக்டர் பிரபாகர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘காவிரி ஆற்றங்கரையோரம் குடியிருந்து வரும் மக்களுக்கு சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி அருகே உள்ள பகுதியில் வீட்டுமனைகள் ஏற்பாடு செய்து தரப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்தி அதற்கான விண்ணப்பத்தை மாவட்ட நிர்வாகத்திடம் பூர்த்தி செய்து கொடுங்கள். அவர்களுக்கு விரைந்து வீட்டுமனைகள் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு பவானி நகராட்சி சார்பில் இரவு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. இந்த பணிகளை நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சோலையப்பன், சிவக்குமார் மற்றும் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் பவானி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் அம்மாபேட்டை மீனவர் வீதியில் காவிரிக்கரையில் உள்ள ஒரு வீட்டில் தண்ணீர் புகுந்தது. உடனே அந்தியூர் தாசில்தார் பாலகுமார், வருவாய் ஆய்வாளர் ஜமுனாதேவி, கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வீட்டில் இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

மேலும் பெரும்பள்ளம், சின்னப்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை ஆகிய இடங்களில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் ஆலோசனை கூறினர்.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானியில் உள்ள காவிரி வீதியில் உள்ள பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் காளியண்ணன் (வயது 75), அவருடைய மனைவி குப்பாயி (65) ஆகியோரின் வீடு காவிரி ஆற்றங்கரையோரத்தின் தாழ்வான பகுதியில் உள்ளது. இவர்களுடைய வீட்டையும் வெள்ளம் சூழ்ந்தது. வீட்டை வெள்ளம் சூழ்ந்தை அறிந்ததும் அவர்கள் தங்களை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர். ஆனால் அருகில் இருந்தவர்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. உடனே இதுகுறித்த தகவல் அந்த பகுதியில் இருந்த பரிசல் ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பரிசல் ஓட்டி ஒருவர் தைரியமாக தன்னுடைய பரிசலை எடுத்துக்கொண்டு காளியண்ணன் வீட்டுக்கு விரைந்து ஓட்டி சென்றார். அங்கு வெள்ளத்தில் சிக்கி தம்பதியினரை பரிசலில் ஏற்றி பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் வயது முதிர்ந்த தம்பதியை காப்பாற்றிய பரிசல் ஓட்டியின் தைரியத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story