மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபர்களுக்கு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு


மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபர்களுக்கு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Aug 2018 4:30 AM IST (Updated: 12 Aug 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபர்களுக்கு சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த முருகேசன்(வயது 19) என்பவர், அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த 2016-ம் ஆண்டு ஒருதலையாக காதலித்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். உடனே மாணவியின் தந்தை, எனது மகளை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்தால் போலீசில் புகார் அளிப்பேன் என கூறி கண்டித்துள்ளார். எனினும் அதனை முருகேசன் கண்டுகொள்ளாமல், தோகைமலை வேதாசலபுரத்தை சேர்ந்த தனது நண்பர் ரமேசுடன்(24) சேர்ந்து கொண்டு சைக்கிளில் பள்ளிக்கு சென்ற அந்த மாணவியை அடிக்கடி வழிமறித்து விசில் அடித்து தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் அந்த மாணவியின் தந்தையை திட்டி தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த மாணவி புகார் கொடுத்தார். அதன் பேரில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்தல் சட்டம் (போக்சோ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன், ரமேசை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு கரூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் நீதிபதி சசிகலா நேற்று தீர்ப்பளித்தார். அதில், முருகேசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12,500 அபராதமும் மற்றும் ரமேசுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டு இருந்தது. மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு தகுந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து துரிதமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மல்லிகா, லதா ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பாராட்டு தெரிவித்தார்.

Next Story