தேர்தலை நேர்மையாக நடத்தக்கோரி கூட்டுறவு சங்க அலுவலக கதவை மூடி போராட்டம்


தேர்தலை நேர்மையாக நடத்தக்கோரி கூட்டுறவு சங்க அலுவலக கதவை மூடி போராட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2018 11:18 PM GMT (Updated: 11 Aug 2018 11:18 PM GMT)

தேர்தலை நேர்மையாக நடத்தக்கோரி கூட்டுறவு சங்க அலுவலக கதவை இழுத்து மூடி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட சத்துணவு திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க அலுவலக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல் கடந்த 7–ந் தேதி நடைபெற்றது. இதில் முத்தாலு, மலர், பிரேமகுமாரி, பச்சையப்பன், மனோகரன், சக்கரவர்த்தி உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் தலைவர், துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெறுவதாக இருந்தது.

காலை 10.30 மணிக்கு வேட்பு மனுதாக்கல் தொடங்கி மதியம் 1 மணிக்குள் தேர்தல் முடிவடைந்து தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் பகல் 12 மணி வரை ஆகியும் தேர்தல் அதிகாரி சுரேஷ்பாபு அலுவலகத்திற்கு வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 9 நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அந்த கூட்டுறவு சங்க அலுவலகத்தின் கதவை இழுத்து மூடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்த வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், சத்துணவு திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க தலைவர், துணைத்தலைவர் தேர்தல் முறைகேடின்றி நேர்மையாக நடத்தப்பட வேண்டும். இதுசம்பந்தமாக கூட்டுறவு சங்க இணைப்பதிவாளரிடம் ஓரிரு நாளில் மனு கொடுக்க உள்ளோம் என்றனர்.

இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story