தேர்தலை முறையாக நடத்த கோரி கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


தேர்தலை முறையாக நடத்த கோரி கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2018 5:00 AM IST (Updated: 12 Aug 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே தேர்தலை முறையாக நடத்த கோரி கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே வி.சாத்தமங்கலம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தில் 11 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நேற்று தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் வி.சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த யாருக்கும் உறுப்பினர் பதவி கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் நடத்தாமலேயே உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த அதிகாரிகளை கண்டித்தும், முறையாக தேர்தல் நடத்தி வி.சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் உறுப்பினர் பதவி வழங்க வேண்டும், இல்லையெனில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பியபடி கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக காலை 9 மணிக்கு திறக்க வேண்டிய அலுவலகம் 11 மணி வரை திறக்கப்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து போலீசார் கூட்டுறவு சங்க அதிகாரிகளை வரவழைத்து அலுவலகத்தை திறந்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகளிடம், தேர்தலை முறையாக நடத்த வேண்டும், இல்லையெனில் தேர்தலை ரத்து செய்யுங்கள் என்று பொதுமக்கள் கூறினர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் காரணமாக நேற்று நடைபெற இருந்த தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story