வயலில் இறங்கி நாற்று நட்டு குமாரசாமி நாடகமாடுகிறார் - எடியூரப்பா குற்றச்சாட்டு


வயலில் இறங்கி நாற்று நட்டு குமாரசாமி நாடகமாடுகிறார் - எடியூரப்பா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Aug 2018 5:09 AM IST (Updated: 12 Aug 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்காமல் வயலில் இறங்கி நாற்று நட்டு குமாரசாமி நாடகமாடுகிறார் என்று பா.ஜனதா தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பல்லாரி,

கர்நாடகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 29-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பல்லாரி மாவட்டத்தில் நேற்று எடியூரப்பா பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இதுவரை 4 மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்துள்ளேன். பல்லாரியில் சில இடங்களுக்கு சென்றேன். அங்கு எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. மாவட்ட பொறுப்பு மந்திரியை நியமிப்பது, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் கூட்டணி அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. கூட்டணி ஆட்சியில் கடந்த 2 மாதங்களாக எந்த விதமான வளர்ச்சி பணிகளும் மாநிலத்தில் நடைபெறவில்லை. முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் மட்டுமே இருக்கிறார்.

வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் அவர் அக்கறையும் காட்டவில்லை. ராமநகர், ஹாசன், மண்டியா மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே குமாரசாமி முன்னுரிமை அளிக்கிறார். மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் பல்லாரியில் 33 சதவீத மழை மட்டுமே பெய்துள்ளது. மழை குறைவாக பெய்துள்ளதால் இங்குள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்லாரியில் மட்டும் கடன் தொல்லையால் 9 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு அரசு சார்பில் எந்த விதமான உதவியும் வழங்கவில்லை.

பல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரியாக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பல்லாரிக்கு இதுவரை வரவில்லை. பல்லாரி மாவட்டத்திற்கு அவர் என்ன செய்ய போகிறார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. நாடாளுமன்ற தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட தொகுதியில் பா.ஜனதாவை வெற்றி பெற வைப்பதுடன், நரேந்திர மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதே எனது குறிக்கோள்.

முதல்-மந்திரி குமாரசாமி மண்டியாவுக்கு சென்று விவசாயிகளுடன் சேர்ந்து வயலில் இறங்கி நாற்று நட்டு நாடகமாடுகிறார். அவர் நாடகமாடுவதை விட்டுவிட்டு விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்காமல் நாடகமாடுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஹாவேரியில் கல்லூரி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

Next Story