வெடிமருந்து குடோனுக்கு தீ வைப்பு வாலிபர் மீது வழக்கு


வெடிமருந்து குடோனுக்கு தீ வைப்பு வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Aug 2018 3:00 AM IST (Updated: 12 Aug 2018 10:24 PM IST)
t-max-icont-min-icon

வெடி மருந்து குடோனுக்கு தீ வைத்ததாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர், 


கடலூர் முதுநகர் அருகே பெரியகாரைக்காட்டை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 31). இவர் அதே பகுதியில் நாட்டு வெடி மற்றும் வானவெடி மருந்து குடோன் வைத்துள்ளார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுரேஷ் (34). கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோகன்ராஜ் வீட்டில் உள்ள நாய், சுரேஷ் வீட்டில் உள்ள கோழிகளை கடித்து தின்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், மோகன்ராஜிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது உன்னையும், உன்னுடைய வெடி மருந்து குடோனையும் தீ வைத்து கொளுத்தி விடுவதாக சுரேஷ் மிரட்டிச்சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மோகன்ராஜிக்கு சொந்தமான வெடி மருந்து குடோனில் உள்ள மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று நேரத்தில் தீ முழுவதும் பரவி எரிய ஆரம்பித்தது. இதில் வானவெடிகள், வெடி மருந்துகள் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. பக்கவாட்டு சுவர்கள் இடிந்து தரைமட்டமாயின.

சத்தம் கேட்டதும் மோகன்ராஜ் மற்றும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இருப்பினும் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதிலும் வெடிகள், மருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இவற்றின் மொத்த சேதமதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும்.

இது பற்றி மோகன்ராஜ் கடலூர் முதுநகர் போலீசில், தன்னுடைய வெடி மருந்து குடோனை சுரேஷ் தீ வைத்து கொளுத்தி இருக்கலாம் என்று சந்தேகத்தின்பேரில் புகார் செய்தார். அதன்பேரில் சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story