மோடியால் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது
பிரதமர் மோடியால் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது என்று எச்.ராஜா கூறினார்.
தென்காசி,
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று குற்றாலம் வந்திருந்தார். அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்த இணையதளத்திலும் இந்தியராக வாழும் ஆன்மிக தமிழர்கள் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதச்சார்பின்மை என்று கூறுபவர்கள் இந்து விரோதிகள். மத்திய அரசை எதிர்க்கலாம். ஆனால் தேசியத்தை எதிர்க்கும் போக்குதான் இப்போது நடைபெறுகிறது. தற்போது சமூக வலைதளங்கள் தான் மிகப்பெரிய ஊடகமாக உள்ளது. சமூக வலைதளங்களில் கருத்துகள் மிக வேகமாக பரவுகின்றன. வலைதளங்கள் மூலமாக ஒரு நிமிடத்துக்கு 4 கோடி பேர் மெயில் அனுப்புகிறார்கள். இவ்வாறாக சமூக வலைதளம் பரவி வருகிறது. மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். அப்போது தான் நிலையான ஆட்சி அமையும். மோடியின் அரசால் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்றால் மோடி வேண்டும். சமூக வலைதளங்களில் மோடியின் சாதனைகளை நீங்கள் வீடியோவாக எடுத்து பரப்புங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன், குற்றாலம் நகர தலைவர் செந்தூர் பாண்டியன், துணை தலைவர் திருமுருகன், தென்காசி நகரசபை முன்னாள் கவுன்சிலர்கள் கருப்பசாமி, சங்கர சுப்பிரமணியன், வக்கீல் திருமால் வடிவு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து எச்.ராஜா தொண்டர்களுடன் நடந்து சென்று, பஸ்நிலையம் அருகில் குற்றாலம் அருவி தண்ணீர் செல்லக்கூடிய பாதையில் இறங்கி அங்கிருந்த குப்பைகளை அகற்றினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் சாமக்கொடைகள் நடத்த அனுமதி அளித்திருப்பதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். கோவிலுக்குள் ஒலிபெருக்கி வைத்துக் கொள்ளலாம். வெளியில் சத்தம் வரக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லாத சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்துகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணுமின் நிலையம், 8 வழிச்சாலை திட்டம் போன்றவற்றில் கைதானவர்களை விடுதலை செய்யக்கூடாது. தாமிரம் ஒரு கிலோ ரூ.625-க்கு விற்றது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியபிறகு ரூ.875-க்கு விற்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு 65 கம்பெனிகள் வெளியேறி உள்ளது. பிறகு வேலைவாய்ப்பு எப்படி கிடைக்கும்? என்றார்.
Related Tags :
Next Story