கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கொலை கணவர் கைது


கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கொலை கணவர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2018 4:00 AM IST (Updated: 13 Aug 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பள்ளிக்கரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 42). இவருடைய மனைவி சுகந்தி(32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மகள்கள் இருவரும் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர்.

அப்போது கதவு வெளிப்புறமாக பூட்டு போடப்பட்டு இருந்ததால் அக்கம் பக்கத்தினரிடம் அவர்கள் தெரிவித்தனர். உடனே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டின் உள்ளே கட்டிலில் ரத்தவெள்ளத்தில் சுகந்தி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சுகந்தி கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

வீட்டில் இருந்த அய்யப்பனை காணவில்லை. எனவே அவர்தான் மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்று கருதிய போலீசார், அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில் வேளச்சேரி விஜயநகரில் நேற்று முன்தினம் இரவு வேளச்சேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அய்யப்பனை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் தனது மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை பள்ளிக்கரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அய்யப்பனை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.  அதில் கிடைத்த தகவல்கள் வருமாறு.

கொலையான சுகந்தி, அய்யப்பனுக்கு 2–வது மனைவி ஆவார். கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அய்யப்பன், தனது மனைவி மற்றும் மகள்களை விட்டு பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக முகலிவாக்கத்தில் தனியாக வசித்து வந்தார்.

மகள்களுடன் பள்ளிக்கரணையில் தனியாக வசித்து வந்த சுகந்திக்கு, மாங்காடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. சுகந்தியுடன் 7 வருடங்கள் குடும்பம் நடத்திய அந்த வாலிபர், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுகந்தியை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது.

இதனால் மகள்களின் படிப்பு மற்றும் குடும்ப செலவுக்கு பணம் இன்றி தவித்த சுகந்தி, இதுபற்றி முகலிவாக்கத்தில் உள்ள தனது கணவரிடம் தெரிவித்தார். அவரும் மகள்களுக்காக கருத்துவேறுபாட்டை மறந்து மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தார்.

ஆனாலும் சுகந்தி, அந்த வாலிபருடனான கள்ளக்காதலை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு சுகந்தியிடம் செலவுக்காக 1,500 ரூபாயை அய்யப்பன் கொடுத்தார். ஆனால் அந்த பணம் போதாது என கணவருடன் சுகந்தி தகராறு செய்தார்.

அதற்கு அய்யப்பன், நீ அந்த வாலிபருடனான கள்ளத்தொடர்பை கைவிட்டு ஒழுங்காக என்னுடன் இரு. மகள்களுக்காகத்தான் உன்னுடன் சேர்ந்து வாழ்கிறேன் என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், வீட்டின் சமையல் அறையில் காய்கறி நறுக்க வைத்து இருந்த கத்தியால் சுகந்தியின் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்தகாயம் அடைந்த சுகந்தி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அய்யப்பன் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டார்.

முன்னதாக கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது, இதை தனது மகள்கள் பார்க்கக்

கூடாது என்பதற்காக அய்யப்பன், தனது மகள்களிடம் பணம் கொடுத்து கடைக்கு சென்று ஏதாவது வாங்கி சாப்பிடும்படி கூறி அனுப்பி உள்ளார் என்பது கைதான அய்யப்பனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அய்யப்பனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story