ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் சிவனடியார்கள் உண்ணாவிரதம்


ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் சிவனடியார்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:30 PM GMT (Updated: 12 Aug 2018 7:35 PM GMT)

ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் சிவனடியார்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவுடையார்கோவில்,

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும் என்ற நூலை திருத்தி எழுதிய ஆசிரியர் ஆ.பத்மாவதி, “ஆவுடையார்கோவில் ஒரு சிவதிருத்தலமே இல்லை“ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறானது. எனவே இந்த திருத்தி எழுதிய நூலை தடை செய்ய வேண்டும். மேலும் இந்த நூலை வெளியிட்ட சைவ சித்தாந்த பெருமன்ற தலைவர் நல்லூர் சரவணனுக்கு கண்டனம் தெரிவித்தும் நேற்று ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலை சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழகம், பாண்டிச்சேரி, கர்நாடகா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும் என்ற நூலை திருத்தி எழுதிய ஆசிரியர் ஆ.பத்மாவதி, ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலுள்ள கல்வெட்டுகளை பார்க்காமலே, அவர் திருத்தி எழுதிய நூலில் தவறாக குறிப்பிட்டுள்ளார். இது இந்து மக்களையும், சிவனடியார்களையும் மிகவும் காயபடுத்தியுள்ளது. மேலும் இந்நூலை வெளியிட்ட சைவ சித்தாந்த பெருமன்ற தலைவர் நல்லூர் சரவணனை கண்டிக்கிறேன். இந்த நூலை உடனடியாக தடை செய்யவேண்டும். இல்லையெனில் அனைத்து சிவனடியார்களையும் ஒன்றுதிரட்டி சென்னையில் மிகப்பெரிய போராட்டம் விரைவில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story