மாவட்ட செய்திகள்

கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: ஊட்டியில் இருந்து வயநாட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பப்பட்டது + "||" + People affected by floods in Kerala: Essential items from the ooty to the wines were sent to the lorry

கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: ஊட்டியில் இருந்து வயநாட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பப்பட்டது

கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: ஊட்டியில் இருந்து வயநாட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பப்பட்டது
கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி ஊட்டியில் இருந்து வயநாட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பப்பட்டது.

ஊட்டி,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், பாலக்காடு, ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இங்குள்ள ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதன் காணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் முழுவதும் 25–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க ஊட்டி நகர மக்கள் முன்வந்தனர். அதன்படி நேற்று ஊட்டி நகரில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிய விரும்பும் நபர்கள், அத்தியாவசிய பொருட்களை வழங்கலாம் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் தனியார் அமைப்பினர் தகவல் தெரிவித்தனர். இதனை பார்த்தவர்கள் பொருட்களை வழங்க ஆர்வம் காட்டினர். மேலும் ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்தவற்றை வழங்கினார்கள்.

அரிசி, பிஸ்கட், பால், மலைக்காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், மேரக்காய், பூண்டு, போர்வை, பாய், நாப்கின்கள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், மருந்து, மாத்திரைகள், மளிகை பொருட்கள், தக்காளி, துணிமணிகள், தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி போன்றவை வழங்கப்பட்டது. ஊட்டி மாரியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் ஒரு லாரியில் பொருட்கள் அனைத்தும் ஏற்றப்பட்டது. பின்னர் அந்த லாரி ஊட்டியில் இருந்து கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக புறப்பட்டு சென்றது.