வறண்டு கிடக்கும் நீர்நிலைகளுக்கு காவிரி நீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


வறண்டு கிடக்கும் நீர்நிலைகளுக்கு காவிரி நீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 13 Aug 2018 4:15 AM IST (Updated: 13 Aug 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளுக்கு காவிரி நீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை,

இந்த ஆண்டு மேட்டூர் அணை 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்து அங்கிருந்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட பாசன தேவைக்கு திறந்து விடப்பட்டது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கடை மடை பகுதிக்கு காவிரி நீர் சென்று அடையவில்லை. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சிக்கு சொந்தமான குளங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. ஆனால் தற்போது வரை காவிரி நீர் மயிலாடுதுறையில் பல குளங்களுக்கு சென்றடையவில்லை. மயிலாடுதுறை பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு, பசுமை தீர்ப்பாயம் ஆகியவை உத்தரவிட்டதை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையால் சில குளங்களுக்கு மட்டும் காவிரி நீர் சென்று சேர்ந்துள்ளது.

மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் செம்மங்குளத்துக்கு நேற்று வரை காவிரி நீர் வந்து சேரவில்லை. இதனால் வறண்டு கிடக்கும் அந்த குளம் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களின் விளையாட்டு மைதானமாக மாறி உள்ளது.

இதைப்போல மயிலாடுதுறையில் உள்ள செட்டிகுளம், தேரடிகுளம், சங்கிலிகுளம், அக்கனாங்குளம், அம்பலாகுளம் உள்ள பல குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதற்கு முக்கிய காரணம் நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளே ஆகும்.

தற்போது மயிலாடுதுறை நகர் பகுதியில் 200 அடி ஆழத்துக்கு கீழ் தான் தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் தண்ணீரை காவிரிக்கு போதுமான அளவு திருப்பி விட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மயிலாடுதுறை பழங்காவிரியில் காவிரிநீர் தொடர்ந்து செல்ல வசதியாக கூறைநாடு, காமராஜர்சாலை, காந்திஜி சாலை ஆகிய பகுதியில் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story