காவிரியில் வெள்ளப்பெருக்கு: தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளை கலெக்டர் பார்வையிட்டார்


காவிரியில் வெள்ளப்பெருக்கு: தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 12 Aug 2018 11:00 PM GMT (Updated: 12 Aug 2018 9:07 PM GMT)

காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.

குமாரபாளையம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் படிப்படியாக உயர்ந்து கரையோரத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. குமாரபாளையம் இந்திரா நகர் கலைமகள் வீதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் இப்பகுதியில் உள்ள 45 குடும்பங்களை சேர்ந்த 125 பேர் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகராட்சி திருமண மண்டபத்திற்கு வருவாய்த்துறையின் மூலம் அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் குமாரபாளையம் இந்திராநகர், மணிமேகலை தெருவில் வசித்து வரும் ஆறு குடும்பங்களை சேர்ந்த 8 ஆண்கள் 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட மொத்தம் 33 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு புத்தர் வீதியில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிபாளையம் பகுதியிலும் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கிருந்தவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார். மேலும் இந்திராநகர் கலைமகள் வீதி மற்றும் மணிமேகலை தெருவில் வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புகளை பார்வையிட்டார். அப்போது திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதற்கிடையே குமாரபாளையத்தில் உள்ள பவானி செல்லும் பழைய ஆற்று பாலத்திற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் நேற்று வந்தனர். இதையொட்டி அவர்கள் பாலத்தில் நின்றபடி காவிரி ஆற்றில் வெள்ளம் செல்வதை கண்டு ரசித்தனர். சிலர் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்வதை தங்களுடைய செல்போன்களில் படம் பிடித்தனர். சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி போலீசார், தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெள்ளத்தை பார்வையிட பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடர்பாளையம் படுகை அணைக்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு காவிரியில் இருந்து தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனால் காவிரியும், ராஜா வாய்க்காலும் ஒரே மட்டமாக சென்றது. மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக அங்கு பயிரிட்டுள்ள கரும்பு, மஞ்சள், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதம் ஆனது. கண்டிபாளையம் காவிரி கரையோரத்தில் வசித்து வந்த மீனவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை போதிய வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story