வில்லியனூர் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது
புதுவை வில்லியனூர் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி,
புதுவை வில்லியனூர், ஊசுடு ஏரி பகுதிகளில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனக்காப்பாளர் அனில்குமார் உத்தரவின்பேரில் வனத்துறை துணை இயக்குனர் குமாரவேலு, வனத்துறை அலுவலர் செல்வநாதன் மற்றும் வனத்துறையினர் பத்துக்கண்ணு பகுதியில் திடீர் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த 2 பேர் வன விலங்குகளை வேட்டையாடி துணி மற்றும் பைகளில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து காட்டுபூனை, முயல் போன்ற விலங்குகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் பேட்டரியுடன் கூடிய டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வன விலங்குகளை வேட்டையாடிய வில்லியனூர் மூர்த்திநகரை சேர்ந்த வடிவேலு (33), அருண் (26) ஆகியோரை கைது செய்து வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
மேலும் மற்றொரு தரப்பினர் வனத்துறையினர் வருவதை பார்த்ததும் தாங்கள் வேட்டையாடியவற்றை போட்டுவிட்டு ஓடினர். அவர்கள் வேட்டையாடிய குயில் மற்றும் பறவைகளை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி அவர்களது உறவினர்கள் புதுவை கடலூர் ரோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல் அதற்கு என பிரத்யேமாக டார்ச் லைட்டை தயாரித்து உள்ளது. அதாவது இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியை மண்எண்ணெய் பிளாஸ்டிக் கேனுக்குள் பாதுகாப்பாக வைத்து அதில் இருந்து டார்ச் லைட்டின் தலை பகுதியை (விளக்கு மட்டும்) எடுத்து வயர் மூலம் மின் இணைப்பு கொடுத்து இதை தயாரித்துள்ளனர். இந்த டார்ச் லைட்டை வேட்டைக்கு செல்லும்போது எடுத்துச் செல்கின்றனர்.
இருட்டில் முயல், காட்டுப்பூனை போன்ற விலங்குகளின் கண்களை நோக்கி டார்ச் லைட் வெளிச்சத்தை பாய்ச்சுவதால் அந்த விலங்குகளால் பார்வை தெரியாமல் அசைவின்றி நிற்பதை பயன்படுத்தி அவற்றை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுகிறார்கள். இதில் பெரும்பாலான விலங்குகள் அரிய வகை இனமாகும். விலங்குகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பான வேட்டையில் சிக்குபவர்களுக்கு 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
இதுகுறித்து வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மத்தியில் விழிப்புணர்வு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.