காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நட்டாற்றீசுவரர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நட்டாற்றீசுவரர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை
x
தினத்தந்தி 13 Aug 2018 5:02 AM IST (Updated: 13 Aug 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நட்டாற்றீசுவரர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பாலம் கட்டும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு,

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணை நேற்று முன்தினம் மீண்டும் நிரம்பியது. இதைத்தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

காவிரி ஆறு பாய்ந்து செல்லும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஈரோடு அருகே காங்கேயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் பிரசித்தி பெற்ற நட்டாற்றீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந் தேதி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். மேலும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும்போது பக்தர்கள் பரிசலில் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் கோவிலை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. பரிசல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஆற்றங்கரையில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், ஆற்று பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் தீயணைப்பு படை வீரர்களும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். மொடக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபடி, காங்கேயம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

கோவிலுக்கு பக்தர்கள் சென்று வரும் வகையில் பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது ஆற்றில் தூண்கள் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், பாலம் கட்டுவதற்காக கம்பிகளால் அமைக்கப்பட்டு இருந்த ‘சாரமும்’ தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் பொதுமக்களும் ஆற்றை பார்வையிட ஆர்வமாக திரண்டனர். குறிப்பாக கருங்கல்பாளையம் காவிரிக்கரை, வெண்டிபாளையம், லக்காபுரம்-கொக்கராயன்பேட்டை மேம்பாலம், பி.பி.அக்ரஹார கட்டளை கதவணை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குவிந்தனர். இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் சீறி பாய்ந்து செல்லும் ரம்மியமான காட்சியை பொதுமக்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும், நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினருடன் வந்தவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம், ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story