சாராய ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு; போராட்டம் நடத்த முடிவு


சாராய ஆலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு; போராட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 13 Aug 2018 5:30 AM IST (Updated: 13 Aug 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

லிங்காரெட்டிபாளையத்தில் சாராய ஆலை அமைக்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

திருக்கனூர்,

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிபாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சாராய ஆலை செயல்பட்டு வந்தது.நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு காரணமாக அந்த ஆலை அப்போது மூடப்பட்டது.

தற்போது இந்த ஆலையை மீண்டும் செயல்படுத்த அரசு சார்பில் மறைமுகமாக ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.பராமரிப்பு பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.

இந்த பகுதியில் மீண்டும் சாராய ஆலை வந்தால் லிங்காரெட்டிபாளையம், சந்தைபுதுக்குப்பம், சுத்துக்கேணி, காட்டேரிக்குப்பம், தமிழக பகுதியான நாராயணபுரம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் என்பதால் இக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை தடுக்கும் விதமாக நேற்று லிங்காரெட்டிபாளையம் விளையாட்டு மைதானத்தில் திருக்கனூர் டி.பி.ஆர்.செல்வம், எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அருள் முருகன், விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் அனைவரும் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

தற்போது அங்கு நடந்து வரும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும், போர்வெல் பணிகளை தடுக்க வேண்டும்.மேலும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வருகிற 28ந்தேதி லிங்காரெட்டிபாளையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காட்டேரிகுப்பத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.


Next Story