பவானி, கொடுமுடி, அம்மாபேட்டையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


பவானி, கொடுமுடி, அம்மாபேட்டையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 13 Aug 2018 5:13 AM IST (Updated: 13 Aug 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

பவானி, கொடுமுடி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

பவானி,

தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியதுடன், அணையில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது காவிரி ஆற்றின் 2 கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன்காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ள படித்துறைகள் முழுவதும் மூழ்கியது. நேற்று தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் படித்துறையை தாண்டி அந்த பகுதியை ஒட்டி உள்ள காவிரி வீதி, மார்க்கெட் வீதி, தேர் வீதி, பழையபாலம் ஆகிய இடங்களில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

இதைத்தொடர்ந்து வீடுகளில் வசித்த பொதுமக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இதனால் பொதுமக்கள பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.

இந்தநிலையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பவானி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கினார். அப்போது அவருடன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, பவானி நகராட்சி ஆணையாளர் கதிர்வேலு, தாசில்தார் சிவகாமி, வருவாய் ஆய்வாளர் மணிமேகலை உள்பட அதிகாரிகள் இருந்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பவானியில் 6 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு, அங்கு தங்கவைக்கப்பட்டு உள்ளனர். மேலும் படித்துறை பகுதிகளை மூழ்கடித்து ஆற்றில் வெள்ளம் சென்றதால் அந்த பகுதியில் யாரும் சென்றுவிடாதபடி கயிறு மூலம் தடுப்பு அமைத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பவானியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் காவிரி ஆற்றுக்கு சென்று வேடிக்கை பார்த்தனர். வாலிபர்கள் சிலர் பழைய பாலம் மற்றும் வீடுகளில் இருந்து காவிரி ஆற்றில் குட்டிக்கரணம் அடித்து குதித்து குளித்து மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி சத்திரப்பட்டி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து அங்கு வசித்த பொதுமக்களை அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். மேலும் இலுப்பைதோப்பு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழந்தது. இந்த பகுதி பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்தநிலையில் மொடக்குறிச்சி சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. மற்றும் மாநில விதை நேர்த்திக்குழு உறுப்பினர் புதூர் கலைமணி, கொடுமுடி தாசில்தார் பாலசுப்பிரமணி, மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி நில வருவாய் அலுவலர் ராஜீவ் காந்தி ஆகியோர் நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அம்மாபேட்டை மீனவர் வீதியில் உள்ள மகேஸ்வரி (வயது 37) மற்றும் அங்காயி (85) ஆகியோரது வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அவர்கள் உடனடியாக வெளியேரினார்கள். இதேபோல் அருகே உள்ள வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்ததால் இவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல், ஒன்றிய செயலாளர் சரவணபவா, ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர்கள் பார்வையிட்டனர்

மேலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.




Next Story