குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:45 AM IST (Updated: 14 Aug 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் குளிக்க 4-வது நாளாக தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை 9 மணி வரையில் மழை விட்டு, விட்டு பரவலாக பெய்தது. நேற்று பகலிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

மார்த்தாண்டம், திருவட்டார், குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பரலாக மழை பெய்தது. நேற்று காலையில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை 1066 கன அடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 631 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலையில் இந்த அணைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் வந்தது. மேலும் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.65 அடியாக உயர்ந்தது. நேற்று காலையில் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக கால்வாயில் திறந்து விடப்பட்டது.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவானது நேற்று மாலை 4 மணிக்கு அதிகரிக்கப்பட்டது. அதாவது 1000 கன அடியில் இருந்து 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதேநேரத்தில் பாசனத்துக்காக அணையில் இருந்து 671 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணையில் திறக்கப்பட்டுள்ள உபரிநீர் மூவாற்றுமுகம் வழியாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சேர்ந்து தேங்காப்பட்டணம் பொழிமுகப்பகுதி வழியாக கடலில் சேரும். இந்த அணையின் கரையோரப்பகுதி மக்களுக்கு ஏற்கனவே பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் அதிகளவு கொட்டும் வெள்ளம் சிறுவர் நீச்சல் குளம் வழியாகவும், அதன் அருகில் உள்ள கல் மண்டபம் வழியாகவும் பாய்கிறது.

இதனால், கடந்த 10-ந் தேதி முதல் அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்தது. நேற்று 4-வது நாளாக இந்த தடை நீடித்தது. இதற்கான அறிவிப்பு பேனர் அருவிக்கு செல்லும் பாதையில் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் பேரூராட்சி ஊழியர்கள் 2 பேர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பேச்சிப்பாறை- 15.6, பெருஞ்சாணி- 14.8, சிற்றார் 1- 17.4, சிற்றார் 2- 12.6, பொய்கை- 9.4, மாம்பழத்துறையாறு- 20, புத்தன் அணை- 15.2, பூதப்பாண்டி- 18.6, களியல்- 8.6, கன்னிமார்- 17.4, கொட்டாரம்- 18.6, குழித்துறை- 19, மயிலாடி- 18.2, நாகர்கோவில்- 11.4, சுருளக்கோடு- 19.2, தக்கலை- 17, குளச்சல்- 12.6, இரணியல்- 14.2, பாலமோர்- 35.6, ஆரல்வாய்மொழி- 9.4, கோழிப்போர்விளை- 22, அடையாமடை- 27, குருந்தங்கோடு- 17.8, முள்ளங்கினாவிளை- 32, ஆனைக்கிடங்கு- 23.2 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 35.6 மி.மீ. அளவில் மழை பெய்திருந்தது. 

Next Story