ஆழ்கடலில் சரக்கு கப்பல் மோதி விபத்து: மேலும் ஒரு மீனவர் உடல் மீட்பு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு


ஆழ்கடலில் சரக்கு கப்பல் மோதி விபத்து: மேலும் ஒரு மீனவர் உடல் மீட்பு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 14 Aug 2018 4:30 AM IST (Updated: 14 Aug 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்கடலில் விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மேலும் ஒரு மீனவர் உடல் மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

கருங்கல்,

குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்தவர் ஏசுபாலன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், ஏசுபாலன் உள்பட 14 மீனவர்கள் கடந்த 6-ந் தேதி கேரள மாநிலம் கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்த போது அந்த வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியது.

இதில் விசைப்படகு முற்றிலும் சேதம் அடைந்தது. படகில் இருந்த 14 பேரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள மீனவர்களை தேடும் பணி நடந்தது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் முனம்பம் பகுதியை சேர்ந்த சிவன் என்பவரது உடல் மீட்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு விசைப்படகு உரிமையாளர் ஏசுபாலனின் உடல் மீனவர்கள் வலையில் சிக்கியது. ஏசுபாலனின் உடலை, முனம்பம் போலீசார் மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தகவல் அறிந்த ஏசுபாலனின் உறவினர்கள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு ஏசுபாலன் உடலை பார்த்து கதறி அழுதனர். ஏசுபாலனின் சகோதரர்கள் ராஜேஷ்குமார், ஆரோக்கியதினேஷ் ஆகியோரும் கடலில் மூழ்கி மாயமாகி உள்ளனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.

இதற்கிடையே கடலில் மூழ்கிய அனைத்து மீனவர்களையும் மீட்கக்கோரி ராமன்துறையில் கடந்த 10-ந் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. போராட்டத்தில் தேசிய மீனவர் பேரவை மாநில தலைவர் ஜார்ஜ் ராபின்சன் தலைமையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலில் மூழ்கிய அனைத்து மீனவர்களையும் மீட்கும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story