ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது மயங்கி விழுந்து இறந்த முதியவர்: விசாரிக்க சென்ற அதிகாரிகளை கிராமத்துக்குள் விடாத மக்கள்


ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது மயங்கி விழுந்து இறந்த முதியவர்: விசாரிக்க சென்ற அதிகாரிகளை கிராமத்துக்குள் விடாத மக்கள்
x
தினத்தந்தி 14 Aug 2018 3:45 AM IST (Updated: 14 Aug 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது திடீரென மயங்கி விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து விசாரிக்க சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் கிராமத்திற்குள் விடாததால் பரபரப்பு ஏற்பட்டது.

பரமக்குடி,

பரமக்குடி யூனியனுக்கு உட்பட்ட ஊரக்குடி கிராமத்தில் ராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியமான இடத்தில் அதே கிராமத்தை சேர்ந்த பச்சமால் என்பவர் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் நிர்வாகிகள் இடத்தை சீரமைக்க உள்ளதாக கூறி அவரை காலி செய்ய வலியுறுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பச்சமால் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவிலுக்கு பாத்தியமான இடத்தில் வசிக்கும் அவரை காலி செய்யுமாறு உத்தரவிட்டார். இருப்பினும் பச்சமால் இடத்தை காலி செய்யாமல் அதே இடத்தில் தென்னை மரங்களை நட்டு பராமரித்துள்ளார்.

மேலும் அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 90 நாட்களுக்குள் கோவில் நிலத்தில் வசிக்கும் அவரை காலி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பரமக்குடி தாசில்தார் உத்தரவுப்படி அதிகாரிகள் நேற்று அங்கு சென்று தென்னை மரங்களை அகற்ற முயன்றனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த முதியவர் கணேசன் (70) திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் விசாரணை நடத்துவதற்காக சப்–கலெக்டர் மணிராஜ், தாசில்தார் பரமசிவம் ஆகியோர் அங்கு சென்றனர். ஆனால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அதிகாரிகளை கிராமத்திற்குள் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் கிராமத்திற்குள் செல்லாமல் ஊரின் எல்லையிலேயே நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு பின்னர் அங்கிருந்து கிளம்பினர். அதனை தொடர்ந்து இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் எடுத்துச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story