உசிலம்பட்டி பகுதியில் விதைகளை விதைத்து விட்டு மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்


உசிலம்பட்டி பகுதியில் விதைகளை விதைத்து விட்டு மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:00 AM IST (Updated: 14 Aug 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி பகுதியில் மானாவாரி பயிர் விதைகளை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துள்ளனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பகுதியில் உள்ள விளை நிலங்கள் அனைத்தும் வானம் பார்த்த பூமியாக உள்ளது. பருவமழை முறையாக பெய்தால் தான் கண்மாய் மற்றும் கிணற்றுப் பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் நெல், கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்ய முடியும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

பருவமழை சரிவர பெய்யாத சூழ்நிலையில் இந்தப் பகுதி விவசாயிகள் குறைந்த அளவு மழை வைத்து மானாவாரி பயிர்களை சாகுபடி செய்ய முக்கியத்துவம் அளித்து ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பருத்தி, குதிரைவாலி, சோளம், மற்றும் பயறு வகை விதைகளை விதைக்க தொடங்கினர். அதேபோல் இந்த வருடம் ஆடிப்பட்டத்தில் மழை பெய்யும் என நம்பி மானாவாரி விவசாயிகள் மழைக்கு முன்பே விதைகளை விதைத்து விட்டனர்.

ஆனால் ஆடிமாதம் முடிந்து ஆவணி மாதம் பிறக்க உள்ளது. ஆடி மாத்திலேயே மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் ஆடிப்பட்டத்தில் மழை சரிவர பெய்யவில்லை. இதனால் விதைத்த விதைகள் முளைக்குமா முளைக்காதா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். அண்டை மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

அங்கு வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது என்ற செய்தியை கேட்டு வரும் விவசாயிகள் தங்கள் பகுதியில் மானாவாரி பயிர்களை வளர்க்கும் அளவிற்காவது மழை பெய்யுமா என்ற ஏக்கத்துடன் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் காத்துள்ளனர்.

உசிலம்பட்டி மற்றும் பேரையூர் பகுதிகளில் மலை மறைவு பகுதி என்பதால் ஆண்டிற்கு ஆண்டு மழையின் அளவு குறைந்து வருகிறது. பருவமழையை நம்பி மட்டும் வாழும் இந்த பகுதி விவசாயிகளின் ஏக்கத்தை போக்க வருணபகவான் தன்னுடையை கருணை பார்வையை காட்டவேண்டும் என்று விவசாயிகள் சிறப்பு பிரார்த்தனை செய்துவருகின்றனர்.


Next Story