தங்கம் கடத்தலுக்கு உடந்தை: கைதான சுங்கத்துறை அதிகாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அனுமதி வழங்கியது.
மதுரை,
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து தங்கம், எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்தவர்களுக்கு திருச்சி விமான நிலைய சுங்க அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சுங்கத்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசலு மற்றும் அதிகாரிகள் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 7–ந் தேதி அவர்களை மதுரை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வெங்கடேசலு, கழுகாசலமூர்த்தி, ராமகிருஷ்ணன் மற்றும் திருச்சி விமானநிலைய ஊழியர்கள் தமயந்தி, தேவகுமார், முத்துக்குமார் ஆகிய 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. போலீசார், மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதேபோல கைதான 19 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு அதே கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கணேசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
இதில் மேற்கண்ட 6 பேரையும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 16–ந் தேதி வரை காவலில் விசாரிக்க சி.பி.ஐ. போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். 19 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.