ஆடிப்பூரத்தையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம்


ஆடிப்பூரத்தையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:00 AM IST (Updated: 14 Aug 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பூரத்தையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் 5 சிவாலயங்களின் அஸ்திர தேவர்களுக்கு தீர்த்தவாரி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம்,

ஆடிமாதம் பூரநட்சத்திரத்தில் சிவாலயங்களில் உள்ள அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த அம்மன்கள் ஆடிப்பூர அம்மன் என அழைக்கப்படும். இந்த அம்மன்களுக்கு ஆடிப்பூரத்தன்று பெண்கள் சுமங்கலி பூஜை நடத்துவார்கள். ஆடிப்பூர தினமான நேற்று கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய கோயில்களிலிருந்து ஆடிப்பூர அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தோடு, கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளினர்.

காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு வந்த ஆடிப்பூர அம்மன்களுக்கு, ஏராளமான பெண் பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அணிவிக்கப்பட்டு, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆடிப்பூர அம்மன்களுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து காசிவிஸ்வநாதர் கோயில் அம்மன் உள்பட 5 ஆடிப்பூர அம்மன் சாமிகளும் கும்பகோணம் மகாமக குளத்தின் மேற்குகரையில் ஒரே இடத்தில் எழுந்தருளினர்.

அப்போது 5 கோவில் களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட அஸ்திரதேவருக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 5 அஸ்திரதேவர்களுக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்களும் குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் குளத்தின் கரையில் எழுந்தருளிய ஆடிப்பூர அம்மன்களுக்கு தீபாராதனை நடைபெற்றது.

இதைப்போல சவுராஷ்டிரா தெருவிலிருந்து சாமுண்டீஸ்வரி அம்மனும் கும்பகோணம் மகாமக குளத்துக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஆடிப்பூர விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் எங்கு நோக்கினும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

Next Story