பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்


பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்
x
தினத்தந்தி 14 Aug 2018 5:45 AM IST (Updated: 14 Aug 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து குப்பை மேட்டில் வீசிய தாயை போலீசார் கைது செய்தனர். குழந்தையை கொன்றுவிட்டு, யாரோ கடத்தி சென்றுவிட்டதாக நாடகமாடினார்.

சரவணம்பட்டி,

கோவையில் நடைபெற்ற கொடூர சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

திண்டுக்கல், கொடைரோடு சிறுமலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இதற்காக சரவணம்பட்டி சிவானந்தபுரம், சங்கரப்பன் தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி வனிதா (22). இவர்களுடைய மூத்த மகள் சசிபிரியா (2), 2-வது மகள் கவிஸ்ரீ. தற்போது 3 மாதங்கள் ஆகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கார்த்திக் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வனிதாவும் 2 குழந்தைகளும் வீட்டில் இருந்தனர்.

அப்போது மாலை 3 மணி அளவில் வனிதா குளிக்க சென்றுவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் அவர் சத்தம்போட்டபடி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து, தொட்டிலில் தூங்க வைத்த குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி கதறி அழுதார். இதுபற்றி கணவருக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இதனால் கார்த்திக் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். குழந்தையை பல இடங்களில் தேடினார்கள். அந்த பகுதியில் சந்தேகப்படும்படி யாராவது குழந்தையை தூக்கி சென்றார்களா? என்றும் தேடினார்கள். வீட்டு தொட்டிலில் தூங்கிய குழந்தை மாயமான தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதை அறிந்து அந்த பகுதி மக்கள் கடத்தல் கும்பல் குழந்தையை தூக்கி சென்று இருக்குமோ? என்று அஞ்சினார்கள். இதனால் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.

இதுபற்றி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், வீட்டில் இருந்து சிறிது தூரம் தள்ளி குப்பை கொட்ட சென்று விட்டு திரும்பியபோது குழந்தை தொட்டிலில் தூங்கியதாகவும், பின்னர் குளித்துவிட்டு வந்து பார்த்தபோது குழந்தை மாயமாகி இருந்ததாகவும் கூறினார்.

மேலும், வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 500 ரூபாய் மற்றும் ஒரு நைட்டியையும் யாரோ தூக்கி சென்றுவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது அவர் குழந்தையை கொன்றதாக திடுக்கிடும் தகவல் தெரிவித்தார். இது போலீசார், வனிதாவின் கணவர் கார்த்திக் ஆகியோரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

வனிதாவுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சீனிவாசன் என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்க கூடாது என்பதால் தன்னுடைய முதல் குழந்தை சசிபிரியாவை திண்டுக்கல் சிறுமலை பகுதியில் உள்ள தன்னுடைய தாயின் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார். 3 மாத பச்சிளம் பெண் குழந்தை அடிக்கடி அழுது அடம் பிடித்துள்ளது. தன்னுடைய கள்ளக்காதலுக்கு இந்த குழந்தை இடையூறாக இருப்பதாக வனிதாவும், கள்ளக்காதலனும் கருதியுள்ள னர். கார்த்திக் வேலைக்கு சென்ற நேரத்தில் தான் பெற்ற குழந்தை என்றும் பாராமல் அந்த பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெரித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தையின் உடலை நைட்டி துணியில் சுற்றி அதை பிளாஸ்டிக் கோணிப்பையில் வைத்து மறைத்து வீட்டின் அருகே உள்ள குப்பை மேட்டில் வீசிவிட்டு எதுவும் தெரியாததுபோல் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் குழந்தை மாயமானதாக அனைவரிடமும் கூறி நாடகமாடி உள்ளார். இந்த நிலையில்தான் அவர் போலீசாரின் விசாரணையில் மாட்டிக்கொண்டார். கொலை செய்வதற்கு கள்ளக்காதலன் சீனிவாசன் உடந்தையாக இருந்தாரா? என்று அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வனிதா கூறிய குப்பை மேட்டுக்கு சென்று குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் வனிதாவையும், போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். வனிதாவை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.இந்த கொலை குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற குழந்தையை தாயே கொன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story