பெங்களூரு, சுதந்திர தின விழா முதல்-மந்திரி குமாரசாமி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்


பெங்களூரு, சுதந்திர தின விழா முதல்-மந்திரி குமாரசாமி நாளை தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 14 Aug 2018 4:30 AM IST (Updated: 14 Aug 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி நாளை(புதன்கிழமை) தேசிய கொடியை ஏற்றுகிறார். இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு,

பெங்களூரு நகர மாவட்ட நிர்வாகம் சார்பில் பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் நாளை (15-ந்தேதி) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு பந்தல், மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று கலெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீஸ் கமிஷனர் சுனில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிறகு கலெக்டர் விஜயசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக மானேக்‌ஷா மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. பந்தல், மேடை, தடுப்புகள், இருக்கைகள் அமைப்பது போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேடையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தேசிய கொடி ஏற்றும் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா புதன்கிழமை(நாளை) நடக்கிறது.

காலை 8.58 மணிக்கு முதல்-மந்திரி குமாரசாமி மைதானத்திற்கு வருகிறார். சரியாக காலை 9 மணிக்கு அவர் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அப்போது விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வானத்தில் பறந்து வந்து பூக்களை தூவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு அணிவகுப்பு மரியாதையை முதல்-மந்திரி ஏற்றுக்கொள்கிறார். அதைத்தொடர்ந்து மாநில மக்களுக்கு முதல்-மந்திரி சுதந்திர தின உரையாற்றுகிறார். போலீஸ் உள்பட பல்வேறு குழுக்களின் அணிவகுப்பு நடக்கின்றன. அதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அணிவகுப்பில் கோவா போலீஸ், சாரண-சாரணியர் உள்பட மொத்தம் 34 குழுக்கள் கலந்து கொள்கின்றன. இதில் 1,130 பேர் பங்கேற்பார்கள். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 2,000 குழந்தைகள் 3 வகையான கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து முதல்-மந்திரி பரிசுகளை வழங்குகிறார்.

சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 9 துணை போலீஸ் கமிஷனர்கள், 16 உதவி கமிஷனர்கள், 46 இன்ஸ்பெக்டர்கள், 102 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 540 போலீசார், 75 பெண் போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கேமராக்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 56 போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்தை சீர்செய்ய 2 துணை போலீஸ் கமிஷனர்கள், 7 உதவி கமிஷனர்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 99 சப்-இன்ஸ்பெக்டர்கள், 263 போலீசார் ஈடுபடுகிறார்கள். மொத்தத்தில் சுதந்திர தின விழாவையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். விழா நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பொருட்களை சோதிக்கும் 4 ‘ஸ்கேனர்‘ கருவிகள் மைதானத்தில் அமைக்கப்படுகிறது.

விழாவுக்கு வரும் பார்வையாளர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மைதானத்திற்குள் சிகரெட், தீப்பெட்டி, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள், கத்திகள், துண்டு பிரசுரங்கள், தின்பண்டங்கள், வீடியோ கேமராக்கள், மதுபான பாட்டில்கள், போதைப்பொருள், குடிநீர் பாட்டில்கள், கொடிகள், ஆயுதங்கள், பட்டாசு, வெடிபொருட்கள் ஆகியவை உள்ளே கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்களின் ஜிம்னாஸ்டிக் மற்றும் 39 ராணுவ வீரர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்லும் சாகச நிகழ்ச்சி நடக்கிறது. விழா நடைபெறும் மைதானத்தில் தீயணைப்பு வாகனங்கள், டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். நகரில் சில மருத்துவமனைகளை அடையாளம் கண்டு, அவற்றில் அதிக எண்ணிக்கையில் படுக்கைகளை காலியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள், பார்வையாளர்கள் அமர வசதியாக 11 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. இந்த தடவை முதல் முறையாக திருநங்கைகள், எச்.ஐ.வி. நோயாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், மூத்த குடிமக்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேளாண்மையில் சாதனை படைத்த விவசாயிகள் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விஜயசங்கர் கூறினார். இந்த பேட்டியின்போது போலீஸ் கமிஷனர் சுனில் குமார் உடன் இருந்தார்.

Next Story