18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்; ஆட்சி மாற்றம் ஏற்படும் டி.டி.வி. தினகரன் பேட்டி


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்; ஆட்சி மாற்றம் ஏற்படும் டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 15 Aug 2018 4:45 AM IST (Updated: 14 Aug 2018 10:36 PM IST)
t-max-icont-min-icon

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தஞ்சையில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்,

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நாளையும்(வியாழக்கிழமை), நாளை மறுநாளும்(வெள்ளிக்கிழமை) எங்கள் தரப்பில் 2 வக்கீல்கள் ஆஜராகி வாதாடுகிறார்கள். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும். இந்த ஆட்சி முடிவுக்கு வரும். நாங்கள், ஜெயலலிதாவின் ஆட்சியை அமைத்து நிச்சயம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம்.

இடைத்தேர்தலில் தி.மு.க. தான் வெற்றி பெறும் என திவாகரன் கூறியிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். பாவம். அவர் உடம்பு முடியாதவர் ஏதோ பேசியிருக்கிறார். அதை பெரிதாக எடுத்துக் கொண்டு என்னிடம் கேட்கிறீர்கள். அவர் எல்லாவற்றையும் பேசிவிட்டு போகட்டும். நாம் செயலில் காண்பிப்போம்.


நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் இப்போது அறிவிக்கப்பட மாட்டார்கள். அந்தந்த ஏரியாவில் மண்டல பொறுப்பாளர்கள், யார் தகுதியான வேட்பாளர்கள் என தேர்வு செய்வார்கள். உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்தவுடன் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். எம்.ஜி.ஆருக்கு தானாகவே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதேபோல ஜெயலலிதாவுக்கும் மத்திய அரசு தானாகவே முன்வந்து பாரத ரத்னா விருது வழங்கும் சூழ்நிலை உருவாகும்.

ஆறுகளில் செல்லும் தண்ணீர் எல்லாம் கடலில் வீணாக கலக்கிறது. ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை அனைத்து கிளை வாய்க்கால்களையும் தூர்வாரியிருந்தால் தண்ணீருக்காக கையேந்தக்கூடிய நிலை ஏற்படாது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சராக 7 ஆண்டுகள் இருந்து இருக்கிறார். குடிமராமத்து பணிக்கு ரூ.400 கோடி ஒதுக்கியதாக சொன்னார்கள். கோடை காலத்தில் தான் ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரும் பணியை செய்து கரைகளை பலப்படுத்துவார்கள். ஆனால் இப்போது கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டவுடன் தூர்வாரும் பணியை செய்கிறார்கள்.


ஜெயலலிதா மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் தி.மு.க.வினர் வழக்கு போட்டனர். யாராக இருந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். ஜெயலலிதா இறந்தவுடன் கொலை செய்து விட்டார்கள் என கிளப்பி விட்டதே தி.மு.க. தான். பொய்யான பிரசாரம் என்றைக்கும் நிலைக்காது. அது தானாகவே நீர்த்து போய்விட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள்.

மன்னார்குடியில் பணம் கொடுத்து மக்கள் கூட்டத்தை கூட்டியதாக காழ்ப்புணர்ச்சி காரணமாக திவாகரன் கூறுகிறார். லெட்டர் பேடு கம்பெனியில் கூறுவதை எல்லாம் பெரிய கேள்வியாக கேட்கிறீர்கள். 30 வருடமாக பொதுச்செயலாளர் பெயரை வைத்து ஏமாற்றி வருகிறார்கள். கழிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் தான் திவாகரன் கட்சியில் இணைவார்கள். தேவையில்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு என்னுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள்.

மத்திய அரசு அடிமைகளை வைத்து தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. தேவையில்லாத சாலை, மக்கள் விரும்பாத ரோட்டிற்காக ரூ.10 ஆயிரம் கோடி கேட்டு பெற்றுள்ளார்கள். தமிழக மக்களுக்காக எதையும் கேட்கமாட்டார்கள். 2019–ல் நாடாளுமன்ற தேர்தல் வரும். அதோடு தமிழகத்திற்கும் தேர்தல் நடக்கும். இந்த ஆட்சி கவிழ்ந்து சட்டசபைக்கும் தேர்தல் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story