அரசு உயர் நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்


அரசு உயர் நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2018 4:00 AM IST (Updated: 15 Aug 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

அழகாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா அழகாபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 282 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 10-ம் வகுப்பு முடித்த பிறகு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிமடம் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதனால் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்க முடியாத மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்போடு பெற்றோர்கள் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். இதனால் இந்த உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழகம் முடிவு செய்து பள்ளி கல்விதுறையை அணுகினர். இதை யடுத்து அதிகாரிகள் பரிசீலனை செய்து அதற்கு தேவையான இடம் ஏற்கனவே உள்ளதால், வைப்பு தொகை மட்டும் கட்ட சொன்னதால் கடந்த 2016-ம் ஆண்டு வங்கியில் பணம் செலுத்தினர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில், உள்ள இரண்டு பள்ளிகள் இந்த கல்வி ஆண்டில் தமிழக அரசு தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த மாணவ-மாணவிகள் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு செல்லாமல் அழகா புரம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு அமைத்திருந்த சாமியான பந்தலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்கள், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தாதை கண்டித்தும், உடனடியாக மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார், வட்டார கல்வி அலுவலர் மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகள் வந்து உறுதி அளித்த பின்னர் தான் கலைந்து செல்ல முடியும் என்று கூறி அங்கேயே அமர்ந்திருந்தனர். இதையடுத்து பள்ளி கல்வி துறை துணை ஆய்வாளர் பழனிசாமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி ஆகியோர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், இன்னும் ஒரு வாரத்தில் உரிய அதிகாரிகளிடம் பேசி உங்களது கோரிக்கையை நிறைவேற்றப்படும் என கூறியதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர். பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அங் கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறவில்லை. 

Next Story