விபத்தில் இறந்தவர் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் இறந்தவர் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 15 Aug 2018 4:00 AM IST (Updated: 15 Aug 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் இறந்தவர் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், முருக்கன்குடியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40). இவர் கடந்த 7.7.2011 அன்று பெண்ணாடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொடிக்காலம் அருகே வந்தபோது விழுப்புரம் அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பெரியசாமி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெரியசாமி மனைவி மலர் கொடுத்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மலர் தனது கணவர் உயிரிழந்ததற்காக ரூ.15 லட்சம் நஷ்டஈடு வழங்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மீது பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் இறந்து போன பெரியசாமியின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் தொகையை விழுப்புரம் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதைதொடர்ந்து ரூ.3 லட்சம் மட்டும் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் வழங்கியுள்ளார். மீதி தொகையை வழங்கவில்லை.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றக்கோரி மலர் கடந்த 12.4.2013 அன்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து விபத்தில் இறந்து போன பெரியசாமியின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ.4 லட்சத்து 3 ஆயிரத்து 256 தொகையை விழுப்புரம் அரசு போக்குவரத்துபணி மனை மேலாளர் வழங்கவேண்டும் எனவும், வழங்காவிட்டால் அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் நீதிபதி பாலராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நீதிமன்ற அமீனா நேற்று பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த திருச்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு இயக்கி வந்து ஆஜர் படுத்தினார். இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் பயணம் செய்தபோது பாதியிலேயே இறக்கிவிடப்பட்டதால், பயணிகளுக்கும், அந்த பஸ் கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story