சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணி


சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணி
x
தினத்தந்தி 15 Aug 2018 4:15 AM IST (Updated: 15 Aug 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகையில், போலீசார் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் உலக பிரசித்திப்பெற்ற அன்னை வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. இதனால் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து நாகை மாவட்டத்துக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று(புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அசம்பாவித சம்பவம் நடக்காத வண்ணம் தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் உத்தரவின் பேரில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நாகை, வெளிப்பாளையம், நாகூர் போன்ற நகர் பகுதிகளில் உள்ள ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வருகிற 29-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனால் வேளாங்கண்ணி வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சுதந்திரத்தினத்தை முன்னிட்டு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் நாகை மாவட்ட எல்லையான நாகூர் அருகே மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். இந்த பணியில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். 

Next Story