தனியார் பஸ்களில் காற்றொலிப்பான்கள் அகற்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை


தனியார் பஸ்களில் காற்றொலிப்பான்கள் அகற்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Aug 2018 4:30 AM IST (Updated: 15 Aug 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் தனியார் பஸ்களில் இருந்து அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்களை அகற்றி கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டார்.

கரூர்,

கரூர் பஸ் நிலையத்திலிருந்து திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் வரையறுக்கப்பட்ட அளவினை விட அதிக ஒலி எழுப்பும் வகையிலான காற்றொலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதால் இரைச்சல் அதிகமாகி ஒலிமாசு ஏற்படுவதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்தது.

அதன்பேரில் நேற்று காலை கரூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த், தனசேகரன், மீனாட்சி, ரவிசந்திரன், கரூர் நகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்டோர் கரூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த தனியார் பஸ்களின் ஒலிப்பான்களை இயக்க செய்து சோதனையிட்டனர். அதில் பலதரப்பட்ட மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றொலிப்பான்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 30 தனியார் பஸ்களில் இருந்து காற்றொலிப்பான்கள் அகற்றப்பட்டன. மேலும் விதிகளை மீறி பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் அலங்கார விளக்குகள் தொங்கபட்டிருக்கிறதா? எனவும் ஆய்வு செய்தனர். அப்போது 6 பஸ்களில் இருந்து பாதுகாப்பு கருதி அலங்கார விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் அங்குள்ள கரூர் மினி பஸ்களிலும் சோதனை நடத்தப்பட்டு விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த 25 காற்றொலிப்பான்கள் அகற்றப்பட்டன.

இதுபோன்ற ஒலிப்பான்களால் இரைச்சல் அதிகமாகி சுற்றுப்புறத்தில் ஒலிமாசு ஏற்படுகிறது. 85 டெசிபல் ஒலி அளவு வரை தான் காற்றொலிப்பான் இருக்க வேண்டும். ஆனால் அகற்றப்பட்டவை அனைத்தும் கூடுதலாக ஒலி எழுப்பக்கூடியவை ஆகும். இதய நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் உள்ளிட்டோர் இதுபோன்ற ஒலி சத்தத்தின் மூலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் சிலர் இந்த காற்றொலிப்பான் சத்தத்திற்கு பயந்து போய் வாகன கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே இது பொதுநலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் தனியார் பஸ், மினிபஸ் உரிமையாளர்கள் ஈடுபட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்தார். 

Next Story