சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி: தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் 20–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் வருகிற 20–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுசெயலாளர் சி.பத்மநாபன் கூறினார்.
கோவை,
தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் (என்.டி.சி.) தமிழகத்தில் 7 பஞ்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த மே மாதம் 31–ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து புதிய ஊதிய உயர்வு வழங்கக்கோரி, நிரந்தர தொழிலாளர்கள் ஏற்கனவே பெற்றுவரும் அடிப்படை சம்பளத்துடன் கூடுதலாக ஆயிரம் ரூபாய் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும், மாறுபடும் பஞ்சப்படியாக 4,800 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் 0.65 பைசா வீதம் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
வருடாந்திர உயர்வாக புதிய அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் வழங்குவதுடன், தற்செயல் விடுப்பு நாட்களை ஆண்டிற்கு 6 நாட்களில் இருந்து 9 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும், மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட குழு நிர்ணயம் செய்துள்ள நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.600 என்பதை என்.டி.சி. பஞ்சாலைகளில் பணியாற்றும் அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அங்கீகரிக்கப்பட்ட பஞ்சாலை தொழிற்சங்கங்கள் முன்வைத்திருந்தோம்.
பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண என்.டி.சி. நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மேலும், புதிய ஊதிய உயர்வினை ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். ஆனால் தொழிலாளர்களின் நலனில் சிறிதும் அக்கறையில்லாத நிர்வாகம் தொடர்ந்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிராகரித்து வந்தது. இதுகுறித்து பல கட்ட முறையீடு மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்றும் நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எனவே தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்கும் வகையில் அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி வருகிற 20–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்து உள்ளோம். மேலும் அன்றைய தினம் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு காலை 11 மணிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மத்திய அரசை கண்டித்தும், என்.டி.சி. நிர்வாகத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. மேலும் அடுத்தடுத்த போராட்டங்களை அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி மேற்கொள்ள இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.