பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 1–ந் தேதி தொடங்குகிறது: வைகை ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி


பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 1–ந் தேதி தொடங்குகிறது: வைகை ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 15 Aug 2018 4:45 AM IST (Updated: 15 Aug 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி வருகிற 1–ந் தேதி வைகை அணையில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

மதுரை,

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநிலத்தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மழை வெள்ளத்தால் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள மேட்டூர் உள்ளிட்ட பெரிய அணைகள் நிரம்பி வழிகின்றன. இதில் சுமார் 40 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. இதற்கு ஆறுகளில் மணல் கொள்ளை நடப்பதுதான் காரணமாகும். நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் மிகவும் பின்தங்கி உள்ளது.

முறையான திட்டமிடல் இல்லாததால் கபினி, கிருஷ்ணராஜசாகர், முல்லை பெரியாறு அணைகள் நிரம்பி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காமராஜருடைய ஆட்சிக்கு பின்னர் தமிழகத்தில் அணைகள் கட்டப்படவில்லை.

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணையை காமராஜர் தான் கட்டினார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் போது, அந்த அணை கேரள மாநிலத்தின் எல்லைக்குள் வந்துவிட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால்தான் தண்ணீர் வீணாகி கடலில் கலக்காமல் தடுக்க முடியும்.

கடந்த 50 ஆண்டு காலத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் அணைகள் கட்டப்படாதது மட்டுமின்றி, ஏரி, குளங்கள் என அனைத்தும் தூர்வாரப்படாமல் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இந்த நிலையில், பாரம்பரியமிக்க வைகை ஆறு தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

எனவே வைகை ஆற்றை காப்பதற்காக வருகிற 1–ந் தேதி விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம்.

இந்த பேரணியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வைகை அணையில் இருந்து தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் இரவு வைகை ஆற்றை பாதுகாப்பது குறித்த பொதுக்கூட்டம் மதுரையில் நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து வருகிற 2–ந் தேதி இந்த விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரத்தில் முடிகிறது.

மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் வைகை ஆறு ஓடும் பாதையில் உள்ள மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, மாநில துணை பொதுச்செயலாளர் கிட்டு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story