வைகையாற்றில் அரசு மணல் குவாரி: விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை வைகையாற்றில் அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மானாமதுரை,
மானாமதுரை அருகே வைகையாற்றில் வாகுடி, செய்களத்து£ர், தெ.புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் அரசு மணல் குவாரி அமைக்க திட்டமிடப்பட்டு அதன் முதல்கட்டமாக தெ.புதுக்கோட்டை வைகையாற்றில் அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டது. இந்த குவாரியில் இருந்து மணல் அள்ளப்பட்டு சிவகங்கை அருகே காயாங்குளம் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை குடோனில் இருப்பு வைத்து அதன் பின்னர் மணல் தேவைப்படுவர்களுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே மானாமதுரை பகுதி விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி குவாரி தொடங்கப்பட்டதை கண்டித்து நேற்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டம் உள்ளூர் மக்களை புறக்கணித்து விட்டு வெளியூர் கிராம மக்களை வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாகவும், அனைத்து கட்சி சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து விட்டு ஒரு சில கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியதாகவும் தே.மு.தி.க சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் மாயழகு கூறும்போது, மானாமதுரை வைகையாற்றில் அரசு மணல் குவாரி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் அனைத்து கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டம், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் எங்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆனால் தற்போது குவாரி தொடங்கப்பட்டதும் சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு முன்வரவில்லை. தற்போது இங்கு நடந்த உண்ணாவிரத போராட்டம் பெயரளவில் இருந்ததுடன் ஒரு சில கட்சியினர் மட்டுமே கலந்து கொண்டனர். உள்ளுர் கிராம மக்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றார்.