முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியை தாண்டியது
தொடர்மழை எதிரொலியாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை தாண்டியது.
தேனி,
தமிழக-கேரள மாநில எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி. அணையை பலப்படுத்தும் பணிக்காக கடந்த 1979-ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.
அந்த பணி முடிந்த பின்னர், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு முட்டுக்கட்டை போட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து 2014, 2015-ம் ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதன்பிறகு போதிய மழைப் பொழிவு இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாக, கடந்த 28-ந்தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. அதன்பிறகு அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதோடு, மழைப் பொழிவும் குறைந்தது. இதனால், நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 135.30 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 377 கன அடியாக இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் நேற்று அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியது. நேற்று காலை 6 மணியளவில் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. அதுவே அணைக்கு நீர்வரத்து அதிகமானதால் நேற்று இரவு நீர்மட்டம் 137 அடியே தாண்டியது.
நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 419 கன அடியாக இருந்தது. அது நேற்று இரவு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தண்ணீர் வெளியேற்றும் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடியாகவும் இருந்தது.
அணையின் நீர் இருப்பு 6 ஆயிரத்து 143 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த அணைப் பகுதிகளில் 13 மதகுகள் அமைந்துள்ளன. நீர்மட்டம் 136 அடியை தாண்டினால் தான் மதகு பகுதிக்கு தண்ணீர் வரும்.
நீர்மட்டம் 137 அடியை தாண்டியதையொட்டி மேடான பகுதியை கடந்து மதகுகளில் தண்ணீர் தொட்டுள்ளது. நீர்மட்டம் 142 அடியை தொட்ட பிறகு, நீர்வரத்து அதிக அளவில் இருந்தால் மட்டுமே உபரி நீர் இந்த மதகுகள் வழியாக கேரளாவுக்கு திறந்து விடப்படும். தற்போது 137 அடியை தாண்டியதால், அணையின் மதகு பகுதிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். நீர்வரத்து அளவும் அடிக்கடி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story