படப்பையில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
படப்பையில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாடித்தோட்டத்திற்கான விதைகள், இடுப்பொருட்கள், வீட்டு தோட்டத்திற்கான விதைப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும்.
மேலும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மல்லிச்செடி, கனகாம்பரம், ரோஜா ஆகிய பூச்செடிகளும் சிறு, குறு விவசாயத்திற்கு பயன்படும் நாற்றுகள், விதைகள், பழத்தோட்டத்திற்கான மா, கொய்யா, எலுமிச்சை கன்றுகளை விவசாயிகள் பெற்றுக்கொள்ள தோட்டக்கலை அலுவலகத்திற்கு வருகின்றனர்.
மோசமான நிலை
ஆனால் 91 வருவாய் கிராமம் உள்ளடங்கிய விவசாயிகள் வந்து செல்லும் அலுவலகமாக உள்ள இந்த தோட்டக்கலை அலுவலகத்தின் கட்டிடம் செடி கொடிகள் முளைத்து மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளது.
கட்டிடத்தில் சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழை காலங்களில் மழை நீர் கட்டிடத்திற்குள் செல்வதால் விதைகள் வீணாகிறது.
கோரிக்கை
மேலும் அலுவலகத்திற்கு சிறு, குறு விவசாயிகள் மற்றும் மாடித்தோட்டம் வீட்டுத்தோட்டத்தில் பயிர் செய்யும் பொதுமக்கள் தோட்டக்கலை துறையினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story