மாவட்ட செய்திகள்

வானவில் : பேட்டரி கார், மோட்டார் சைக்கிளுக்கு மானிய உதவி: மத்திய அரசு திட்டம் + "||" + Vanavil : subsidy assistance at Battery car, motorbike

வானவில் : பேட்டரி கார், மோட்டார் சைக்கிளுக்கு மானிய உதவி: மத்திய அரசு திட்டம்

வானவில் :  பேட்டரி கார், மோட்டார் சைக்கிளுக்கு மானிய உதவி: மத்திய அரசு திட்டம்
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே பேட்டரி வாகனங்களை பயன்படுத்த அரசு வலியுறுத்தி வருகிறது.

பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், அதைப் பயன்படுத்து வோருக்கும் சலுகை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களையும் பேட்டரியில் இயங்கும் வகையில் மாற்ற முடிவு செய்து அதற்கான வழி முறைகளை செயல்படுத்தி வருகிறது அரசு. இதற்காக ரூ. 9,400 கோடியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.


பேட்டரி கார்களை வாங்குவோருக்கு அதிகபட்சமாக ரூ. 2.5 லட்சமும், பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ. 30 ஆயிரம் வரை சலுகை கிடைக்கும்.

இதேபோல ஆட்டோக்களுக்கு ரூ. 75 ஆயிரமும், சரக்குகளை ஏற்றிச்செல்லும் மினி லாரிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலும் மானிய உதவி கிடைக்கும்.

லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை மானிய உதவி அளிக்கவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

இது தொடர்பான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவிலேயே இது அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

பேட்டரி வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனங்கள்

அரசின் இந்த முயற்சியைத் தொடர்ந்து பெரிய நிறுவனங்களும் பேட்டரி கார் தயாரிப்பில் இறங்கி யுள்ளன.

குறிப்பாக ஜெர்மனியின் பி.எம்.டபிள்யூ, ஆடி, மெர்சிடஸ் பென்ஸ் ஆகிய நிறு வனங்கள் அனைத்தும் தற்போது பேட்டரி கார் தயாரிப்பில் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளன. 2022-ம் ஆண்டில் 10 புதிய மாடல் பேட்டரி கார்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. பி.எம்.டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே ‘ஐ8’ எனும் பேட்டரி காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும் அடுத்த ஆண்டில் ‘ஐபேஸ்’ எனும் பேட்டரி காரை அறிமுகப்படுத்த இருக்கிறது.

அசோக் லேலண்ட் நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பேட்டரியில் இயங்கும் பஸ்களை காட்சிப்படுத்தியது. இதேபோல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பேட்டரி வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

பேட்டரி கார்களுக்கான மானிய உதவி ‘பேம் 1’ என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் அடுத்த (செப்டம்பர்) மாதத்துடன் முடிவடைகிறது. இது மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று தொழில் துறையினரும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். ‘பேம் 2’ என்ற பெயரில் இது மறு அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் மானிய உதவி கிடைக்கும் பட்சத்தில் 2030-ம் ஆண்டுக்குள் அனைத்துமே பேட்டரி வாகனங்களாக மாற்றும் இலக்கை எட்டுவது சாத்தியம் என்றே கருதப்படுகிறது.