குமரியில் பலத்த மழை: தண்டவாளத்தில் மண் சரிவு; ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் 9 ரெயில்கள் ரத்து


குமரியில் பலத்த மழை: தண்டவாளத்தில் மண் சரிவு; ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் 9 ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 15 Aug 2018 11:15 PM GMT (Updated: 15 Aug 2018 7:32 PM GMT)

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் இரணியல் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய கனமழை நேற்று காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் இரணியல்- நாகர்கோவில் வழித்தடத்தில் இரணியல் ரெயில் நிலையம் அருகில் நேற்று அதிகாலையில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது.

தண்டவாளத்தின் இருபுறமும் மேடான பகுதியில் இருந்து மண், பாறை, மரங்கள் சரிந்து தண்டவாளத்தில் விழுந்து முற்றிலுமாக மூடியது. இதனால், தண்டவாளம் அடையாளம் தெரியாத நிலையில் மூடி கிடந்தது.

குருவாயூரில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில், மார்த்தாண்டத்தை தாண்டி இரணியல் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சிக்னலுக்காக ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது. சிக்னல் போட்டவுடன் மீண்டும் ரெயில் புறப்பட்டது. அப்போது இரணியல் ரெயில் நிலையத்துக்கு முன்பாக தண்டவாளத்தில் மண்சரிந்து மூடிக்கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தினார்.

இதுபற்றி இரணியல் ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், அதிக அளவில் மண் மூடி இருந்ததாலும் சீரமைப்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. மேலும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மண் சரிவு காரணமாக நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்த வழித்தடத்தில் சென்ற பல ரெயில்கள் நடு வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும், நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயங்கக்கூடிய அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து புறப்படவேண்டிய நாகர்கோவில்- திருவனந்தபுரம் பயணிகள் ரெயில், கன்னியாகுமரி- பெங்களூரு ஐலேண்டு எக்ஸ்பிரஸ் உள்பட 9 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

மண் சரிவு காரணமாக, சென்னையில் இருந்து கொல்லம் வரை செல்லவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை நேற்று நாகர்கோவில் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

நெடுந்தூர பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் பொருட்டு மாற்று ஏற்பாடாக, கொல்லம்- சென்னை இடையேயான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றது. தினசரி காலை 6.40 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழியாக மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று 8 மணி நேரம் தாமதமாக மதியம் 2.40 மணிக்கு மும்பை புறப்பட்டு சென்றது. மண் சரிவு காரணமாக இந்த ரெயில் வழக்கமான பாதையில் செல்லாமல் நேற்று திருநெல்வேலி, மதுரை மார்க்கமாக மும்பைக்கு இயக்கப்பட்டது.

இதனால், அதில் பயணம் செய்த பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

Next Story