ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி வருகிறது


ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி வருகிறது
x
தினத்தந்தி 16 Aug 2018 4:45 AM IST (Updated: 16 Aug 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து நேற்று மேலும் அதிகரித்துள்ளது. வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி வருகிறது.

பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கர்நாடகா, கேரளாவில் பலத்த மழை பெய்தது. இந்த தொடர்மழை எதிரொலியாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அந்த 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நீர்வரத்து மேலும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின்அருவி, சினிபால்சில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி கரையோரத்தில் இருந்த 6 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அந்த 6 குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்தனர். ஆனால் அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகளை மடம் சோதனைச்சாவடி, கண்ணாடிகுண்டு ஆகிய பகுதிகளில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒகேனக்கல், காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

Next Story