பழனி அருகே மனைவிக்கு கத்திக்குத்து தொழிலாளி கைது
பழனி அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நெய்க்காரப்பட்டி,
பழனியை அடுத்த கோரிகடவை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 34). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வனச்செல்வி (31). கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் வனச்செல்வி அதே பகுதியில் உள்ள பெரிய மொட்டனூத்து தோட்டத்திற்கு கூலிவேலைக்கு சென்றார்.
அங்கு சென்ற நாச்சிமுத்து அவரை குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நாச்சிமுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வனச்செல்வியை குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசில் வனச்செல்வி புகார் கொடுத்தன்பேரில், நாச்சிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.