வால்பாறையில் கனமழை நீடிப்பு: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; வீடுகளை மழைநீர் சூழ்ந்தது


வால்பாறையில் கனமழை நீடிப்பு: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; வீடுகளை மழைநீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 16 Aug 2018 4:00 AM IST (Updated: 16 Aug 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கனமழை நீடிப்பதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

வால்பாறை,

வால்பாறையில் கனமழை தொடர்ந்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாழைத்தோட்டம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்குள்ள 50–க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள பாத்திரங்கள் தண்ணீ ரில் மிதந்தன. ஒரு வீட்டில் குடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் பழனிமுத்து என்பவரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. வால்பாறை–பொள்ளாச்சி மலைப்பாதை சாலையிலும், பெரியார்நகர் அருகே உள்ள சாலையிலும் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது. இது தவிர வால்பாறை அரசு போக்குவரத்துக்கழக டெப்போவிற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் நகராட்சி கழிவுநீர் அகற்றும் லாரிகளை கொண்டு தண்ணீர் அகற்றப்பட்டுவருகிறது. நடுமலை சாலையின் ஓரத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலாபயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சோலையார் அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் சோலையார்அணையிலிருந்து 9497.11 கன அடித்தண்ணீர் மதகு வழியாக கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் மின்நிலையம்–2 இயக்கப்பட்டு 626.27 கனஅடித்தண்ணீரும் கேரளாவிற்கும் திறந்து விடப்பட்டு வருகிறது. சோலையார் மின்நிலையம்–1 இயக்கப்பட்டு 248.15 கனஅடித்தண்ணீரும்,சேடல்பாதை வழியாக 4259.72 கனஅடித்தண்ணீரும் பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது. சோலையார்அணை தொடர்ந்து தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டிய நிலையில் 163.28 அடியாக இருந்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, வால்பாறையில் இதுபோன்று மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில்லை. வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இந்த கனமழை நீடித்தால் வால்பாறை பகுதி பொதுமக்கள், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றனர். வால்பாறை தாசில்தார் சியாமளாதேவி தலைமையில் வருவாய்த்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர், போலீசார், தீயணைப்புத்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.


Next Story