சுதந்திர தினவிழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பு: பள்ளியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியைகள்
காரைக்குடி அருகே சுதந்திர தினவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் பள்ளியில் அமர்ந்து ஆசிரியைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி மகர்நோன்பு திடலில் தனியார் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றப்பட்டது. விழாவில் பங்கேற்க அந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றும் மரியசாந்தா, ஜெயஜூலி, உமாதேவி ஆகியோர் வந்தனர். அப்போது அந்த பள்ளி தலைமையாசிரியை மற்றும் மற்ற ஆசிரியைகள் அந்த 3 ஆசிரியைகளையும் விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என கூறினர். இதையடுத்து அந்த 3 ஆசிரியைகளும் அங்குள்ள கொடிகம்பம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த 3 ஆசிரியைகள் பள்ளி நிர்வாகத்தின் மீது சில புகார்களை தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி தலைமையாசிரியை சுவேதாவிடம் போலீசார் விசாரணை செய்தபோது, அந்த 3 ஆசிரியைகளும் பள்ளியின் விதிமுறையை மீறி செயல்பட்டு வருகின்றனர் என்றார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த 3 ஆசிரியைகளும் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.