கிராமப்புற பெண் குழந்தைகள் உயர்கல்வி பெற உண்டு உறைவிட கல்லூரிகள் தொடங்கப்படும் - குமாரசாமி அறிவிப்பு


கிராமப்புற பெண் குழந்தைகள் உயர்கல்வி பெற உண்டு உறைவிட கல்லூரிகள் தொடங்கப்படும் - குமாரசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2018 4:30 AM IST (Updated: 16 Aug 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புற பெண் குழந்தைகள் உயர்கல்வி பெற, உண்டு உறைவிட கல்லூரிகள் தொடங்கப்படும் என சுதந்திர தின உரையில் குமாரசாமி அறிவித்தார்.

பெங்களூரு,

பெங்களூரு மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நவீன உலகின் மிகப்பெரிய ஆயுதமாக அகிம்சை உள்ளது. அகிம்சை மூலம் சுதந்திரத்தை பெற்ற வீர பரம்பரையை சேர்ந்தவர்கள் நாம். வேற்றுமையில் ஒற்றுமை கண்ட சில நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. மகாத்மா காந்தியின் விருப்பங்கள் மீது நமது சுதந்திர நாடு உருவாகியது. எனது வாழ்க்கையே ஒரு பாடம் என்று மகாத்மா காந்தி சொன்னார். அவருடைய இந்த பேச்சு நமக்கு வழிகாட்டி.

காந்தியின் 150-வது ஜெயந்தி கொண்டாட்டத்தை நாம் நெருங்கி இருக்கிறோம். ‘காந்தி-150‘ ஒரு நாடக பயணம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 1,000 இடங்களில் நாடகங்கள் நடத்தப்படும். அர்த்தப்பூர்வமாக காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும். இந்தியாவின் அங்கீகாரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் சுவாமி விவேகானந்தர். இந்த மாபெரும் தலைவர்களின் வாழ்க்கை நமக்கு எப்போதும் வழிகாட்டியாக இருக்கும்.

உலகின் வலுவான நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. அறிவியல், விவசாயம், தொழில், தொழில்நுட்பம், விண்வெளி என எல்லா துறையிலும் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையில் கர்நாடகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. சுதந்திர போராட்டத்தில் கர்நாடகத்தின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. சுதந்திர போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் சிறை சென்றனர். அவர்களில் வட கர்நாடகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

கர்நாடகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. முந்தைய அரசு மற்றும் எங்கள் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுகள் இந்த வளர்ச்சியை அடைய திட்டங்களை கொண்டுள்ளன. பெலகாவியுடன் எனக்கு உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு உள்ளது. பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்துவதை நான் தொடங்கினேன். அங்கு சுவர்ண சவுதாவை கட்டுவதற்கு நான் அடிக்கல் நாட்டினேன்.

கிராமத்தில் தங்குதல் திட்டத்தை பெலகாவியில் தான் தொடங்கினேன். மொத்தம் 47 கிராமங்களில் தங்கி மக்களை சந்தித்தேன். இதில் 27 கிராமங்கள் பெலகாவியில் இடம் பெற்றது. சில துறைகளை பெலகாவிக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். இது பெருமை அளிக்கிறது. காசர்கோடு, சோலாப்பூர், கோவாவில் உள்ள கன்னடர்களின் பிரச்சினைகள் அந்த மாநில அரசுகளுடன் சுமுகமாக பேசி தீர்க்கப்படும். மனிதவள வளர்ச்சியை ஏற்படுத்த எங்கள் அரசு பணியாற்றி வருகிறது.

கட்டமைப்பு வசதிகள், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சமூக பாதுகாப்பு வழங்குவது தான் எங்கள் அரசின் முதல் முன்னுரிமை ஆகும். விவசாயிகளுக்கு உதவ கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் ரூ.48 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். முதல் கட்டமாக கூட்டுறவு வங்கிகளில் கடனை தள்ளுபடி செய்துள்ளோம். இதன் மூலம் 22.38 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடன் தள்ளுபடிக்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும். சமீபத்தில் மண்டியா மாவட்டம் சீதாப்பூர் கிராமத்தில் விவசாய பணிகளில் நான் கலந்து கொண்டேன். அங்கு தண்ணீர் பற்றாக்குறையால் 3 ஆண்டுகளாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு இருந்தன. இதே போல் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து விவசாய பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். நவீன விவசாயம் குறித்து விவசாயிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இதன் நோக்கம் ஆகும். விவசாயிகளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பது தான் இந்த ‘ரைத ஸ்பந்தன‘ நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறேன்.

சில மாவட்டங்களில் தொழிற்பேட்டைகளை அமைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டங்களில் தலா 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அந்த மாவட்டங்களில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவை தவிர்த்து மாநிலத்தின் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு நீர் மின் உற்பத்தி அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பெங்களூரு எலகங்காவில் கியாஸ் மூலம் 370 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் இந்த ஆண்டு நிறைவடைந்து மின் உற்பத்தி தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மின் வழித்தடங்கள் பலப்படுத்தப்படும். இதற்காக 25 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். புதிதாக 800 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின்வழி பாதை அமைக்கப்படும். இந்த ஆண்டுக்குள் மின் வசதி இல்லாத வீடுகளுக்கு மின் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

விவசாய பம்புசெட்டுகளுக்கு 7 மணி நேரம் மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படும். அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரிக்க எங்கள் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பள்ளிகளை நவீனப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கிராமப்புற பெண் குழந்தைகள் உயர்கல்வியை பெற வேண்டும். இதற்காக அரசு உண்டு உறைவிட கல்லூரிகள் தொடங்கப்படும். திறன் அடிப்படையிலான பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

பள்ளிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் உதவி கோரப்பட்டுள்ளது. இதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்படும். எனது குரு நரசிம்மய்யா பெயரில் கவுரிபித்தனூர் தாலுகா ஓசூர் கிராமத்தில் ஒரு சிறப்பு அறிவியல் மையம் அமைக்கப்படுகிறது. மக்கள் சுகாதார வசதிகளை எளிதாக பெறும் வகையில் சுகாதார கர்நாடக திட்டம் இன்னும் மேம்படுத்தப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் நலிவடைந்த பிரிவினரை மேம்படுத்த எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.

காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். அந்த திசையில் எனது தலைமையில் தரைவழி போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். சுற்றுச்சூழல் மாசுடைவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பசுமை கர்நாடகம் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்படும். இந்த பணிகளை தலைமை செயலாளர் மேற்பார்வையிட்டு வருகிறார்.

3-வது கட்ட மாநில நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3,831 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் மேம்படுத்தப்படும். 4-வது கட்ட திட்டத்தின் கீழ் ரூ.3,480 கோடியில் 2,722 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்படுத்தப்படும். பெங்களூருவை மேம்படுத்த எங்கள் அரசு முன்னுரிமை அளிக்கிறது. நகரில் போக்குவரத்து, குப்பை பிரச்சினை, காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.

பெங்களூருவில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. உயர்த்தப்பட்ட சாலை, புறநகர் ரெயில் திட்டம் போன்றவற்றையும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விமான கண்காட்சி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதை மாற்றும் நடவடிக்கைக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விமான கண்காட்சியை பெங்களூருவிலேயே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மற்றும் ராணுவத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். சாதகமான பதில் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பொதுமக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவது எங்கள் அரசின் முதல் முன்னுரிமை ஆகும். மாநில மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசு எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாது. மகளிர் காவல் நிலையங்கள் மேம்படுத்தப்படும். காவல் துறையை நவீனப்படுத்த சீர்திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story