பலத்த மழை எதிரொலி: கூடலூர்-குமுளி மலைப்பாதையில் நிலச்சரிவு
பலத்த மழை எதிரொலியாக, கூடலூர்-குமுளி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கூடலூர்,
தமிழக-கேரள எல்லையில் குமுளி உள்ளது. இங்கு, தேனி-கொல்லம் நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. குமுளிக்கு செல்ல வேண்டுமானால், லோயர்கேம்ப்பில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாக மலைப்பாதையில் பயணிக்க வேண்டும்.
தேக்கடி, வாகமன் செல்வோர் வாகனங்களில் இந்த வழியாகவே செல்கிறார்கள். குமுளிக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த மலைப்பாதை வழியாகவே சென்று வருகின்றன. இதேபோல் தினமும் கேரள மாநிலத்தில் உள்ள தோட்டங்களுக்கு கூலித்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
இந்தநிலையில் கூடலூர், குமுளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய, விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் எதிரொலியாக நேற்று பகலில், இரைச்சல் பாலம் மேல்வளைவில் உள்ள மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பஸ், லாரி, ஆட்டோ, கார், மோட்டார்சைக்கிள் போன்ற எந்தவொரு வாகனமும் கேரள மாநிலத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மலைப்பாதையில் போக்குவரத்தை நிறுத்தினர்.
கேரள மாநிலத்துக்கு செல்லக்கூடிய வாகனங்கள் கம்பம்மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சென்னியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி மலைப்பாதையை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அந்த இடத்தில் ‘விபத்து பகுதி‘ என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. சீரமைப்பு பணி முடிவடைய இன்னும் 10 நாட்கள் வரை ஆகும் என்று தெரிகிறது. அதுவரை கூடலூர்-குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல் கூடலூர்-குமுளி மலைப்பாதையில் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அதனை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் முக்கிய பாதையில் கூடலூர்-குமுளி மலைப்பாதை ஒன்றாகும். இந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகனங்களில் கம்பம்மெட்டு வழியாக நீண்டதூரம் சுற்றிவரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மலைப்பாதை சீரமைப்பு பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story