நடுக்கடலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மீன்பிடிக்க சென்று பாதியில் கரை திரும்பிய மீனவர்கள்


நடுக்கடலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மீன்பிடிக்க சென்று பாதியில் கரை திரும்பிய மீனவர்கள்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:30 AM IST (Updated: 16 Aug 2018 11:08 PM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் பாதியில் கரைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

குளச்சல்,

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் மீன்பிடித்து வருகின்றன. கட்டுமர மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்று விட்டு மதியம் கரை திரும்புவார்கள். விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள்.

கடந்த ஜூன், ஜூலை மாதங்கள் மீன்பிடிக்க தடை காலம் அமலில் இருந்ததால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தடைகாலம் முடிந்து இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் நடுக்கடலில் கடந்த ஓரிரு தினங்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நடுக்கடலில் தங்கியிருந்த மீனவர்களால் மீன்பிடி தொழிலை செய்ய முடியவில்லை. அத்துடன் கடந்த நவம்பர் மாதம் வீசிய ‘ஒகி’ புயலின் பாதிப்பில் இருந்து மீனவ கிராமங்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், தற்போது மீண்டும் புயல் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், குளச்சல் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதை கைவிட்டு பாதியிலேயே கரைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். நேற்று அதிகாலை மட்டும் 50 விசைப்படகுகள் கரை திரும்பின. இந்த விசைப்படகுகளில் குறைவான அளவில் சிறு, சிறு மீன்கள் மட்டுமே காணப்பட்டன.

மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது, விசைப்படகுகளுக்கு டீசல் அடைப்பார்கள். மேலும், உணவு மற்றும் பராமரிப்பு செலவிற்கும் ஆயிரக்கணக்கில் செலவு செய்வார்கள். ஆனால், பணியை முழுமையாக செய்ய முடியாமல் குறைவான மீன்களுடன் கரைக்கு திரும்புவதால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கரை திரும்பிய விசைப்படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோல், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கட்டுமர மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களது கட்டுமரங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி இருந்தனர்.

Next Story