விசைப்படகு மீது கப்பல் மோதியது: பலியான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்


விசைப்படகு மீது கப்பல் மோதியது: பலியான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Aug 2018 4:15 AM IST (Updated: 16 Aug 2018 11:55 PM IST)
t-max-icont-min-icon

விசைப்படகு மீது கப்பல் மோதியதில் இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று மீன் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ.) மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், பொதுச்செயலாளர் அந்தோணி, ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அந்தோணி பிச்சை உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஓசியானிக் என்ற மீன்பிடி விசைப்படகில் குமரி மாவட்டம் ராமன்துறை, முள்ளூர்துறை, கீழமணக்குடி, கொல்கத்தா, கேரளா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 7–ந் தேதி அதிகாலையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மத்திய அரசுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீனவர்களின் விசைப்படகில் மோதியது.

இதில் விசைப்படகு உடைந்து கடலில் மூழ்கியது. இதில் 3 பேர் இறந்தனர். எட்வின், நரேன் சர்க்கார் ஆகிய 2 பேரும் உயிரோடு மீட்கப்பட்டு எர்ணாகுளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே மீன்பிடி வலையில் இரண்டு மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களின் உடல்களை தேடி வருவதாக கூறப்படுகிறது. அவர்களை நவீன ரேடார் கருவி உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களுடன் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். விபத்தில் இறந்த ஒவ்வொரு மீனவர் குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடி நிவாரணமாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுத்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு கோரிக்கை மனுவும் கொடுத்தனர். அதில் அவர்கள், “இயற்கையால் ஏற்பட்ட மாறுதல்களால் மீன்வளம் குறைந்துள்ளது. கிடைக்கின்ற மீன்களை பிடிப்பதில் ஒரு சிலர் திட்டமிட்டு தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட வகை வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கக்கூடாது என்று கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த வலையில் மீன்பிடிக்கக்கூடாது என்று கலெக்டர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அறிகிறோம். அது வருந்தத்தக்கது. இந்த வலை மீன்வள துறையினரால் தடை செய்யப்பட்டது அல்ல. அரசுக்கு எதிரான வலையும் இல்லை. தமிழக அரசால் தடை செய்யப்படவும் இல்லை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த வலை பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த உண்மையை நேரில் அறிவதற்கு கட்டுமரம், வள்ளம் மீனவர்கள் அனைத்து தரப்பினரையும் அழைத்து விவாதித்து ஏழை மீனவர்களை வாழ வைக்க வேண்டும்“ என கூறப்பட்டுள்ளது.

Next Story