கூட்டுறவு சங்க தேர்தலில் பரபரப்பு: அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மோதல்
சங்கரன்கோவிலில் கூட்டுறவு சங்க தேர்தலின் போது அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். பின்னர் தேர்தல் நடந்தது.
சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்- ராஜபாளையம் ரோட்டில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் நிலவள வங்கி உள்ளது.
இந்த வங்கியில் குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், பெரியகோவிலான்குளம், வாடிக்கோட்டை, மணலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட 6009 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த வங்கியில் நேற்று 11 நிர்வாக உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல், ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. தேர்தல் அலுவலராக ஜெயலட்சுமி இருந்தார். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் நிலவள வங்கி தலைவர் லட்சுமணன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தல் நடைபெறும் நேரத்தில் காலை 10.40 மணிக்கு லட்சுமணன் அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே தேர்தலின் போது ஓட்டு போட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு நவநீதகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதில் அ.தி.மு.க.வினருக்கும், அ.ம.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி கொண்டனர்.
போலீசார் லேசான தடியடி நடத்தி இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் அ.ம.மு.க.வினர் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அ.ம.மு.க. நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் கூறும்போது, சந்தேகப்படும் நபர்கள் இருந்தால் அவர்களிடம் மட்டும் அடையாள அட்டை கேட்டால் போதும் என தெரிவித்தார். அதை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மீண்டும் தேர்தல் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story