வாஜ்பாய் உருவப்படத்திற்கு பா.ஜனதாவினர் மலர்தூவி அஞ்சலி


வாஜ்பாய் உருவப்படத்திற்கு பா.ஜனதாவினர் மலர்தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 17 Aug 2018 4:45 AM IST (Updated: 17 Aug 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி பா.ஜனதாவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு ஆதரவு தரும்படி வியாபாரிகளிடம் பா.ஜனதாவினர் ஆதரவு கேட்டனர்.

புதுச்சேரி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருடைய மறைவையொட்டி புதுவை மாநில பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதில் புதுவை மாநில பா.ஜனதா தலைவரும், எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி, பொதுச்செயலாளர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் செல்வம், ஏம்பலம்.செல்வம், சோமசுந்தரம், துரை கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைவர்கள் தாமோதரன், கேசவலு, இளைஞர் அணியினர், மகளிரணியினர் பலர் கலந்துகொண்டனர். 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. முன்னதாக கட்சி தலைமை அலுவலகத்தில் பா.ஜனதா கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

அதையடுத்து பா.ஜனதாவினர் மோட்டார் சைக்கிள் களில் கட்சிக்கொடியுடன் சென்று புதுவை நகரப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முழுஅடைப்புக்கு ஆதரவு தரும்படி கேட்டனர்.

அதேபோல் திருபுவனை பகுதியில் மாவட்ட செயலாளர் சதாசிவம் தலைமையில் தொகுதி பொதுச்செயலாளர் கார்த்திக், அவைத்தலைவர் அற்புதராஜ், பொருளாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டனர்.

முன்னதாக வாஜ்பாய் மறைவையொட்டி புதுவை நகரப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் ஏராளமாக கடைகள் அடைக்கப்பட்டன.

Next Story